பொதுவாக சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் மற்றும் நடிகைகள் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், படங்களை தயாரிப்பது, இயக்குவது மற்றும் இதர பணிகளில் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு மாறாக நடிகர் அஜித் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் பைக் ரேசில் ஈடுபடுவது, துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

வருமானம் ஈட்டும் பணிகளை விடுத்து தனக்கு பிடித்த போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்தின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு 6 பதக்கங்களை வென்று அசத்தினார்.

மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற அஜித், தற்போது தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார். இப்போட்டி விரைவில் டெல்லியில் தொடங்க உள்ளது. இதற்காக சமீபத்தில் டெல்லி சென்ற நடிகர் அஜித், அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பயிற்சிக்கிடையே கிடைத்த ஓய்வு நேரத்தில் தஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்ற நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலரும் அஜித்தை தேடி வந்து புகைப்படம் எடுத்துள்ள நிலையில், அஜித் ஒருவரை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

தனி ஒரு பெண்ணாக மோட்டார் சைக்கிளில் 7 கண்டங்கள் மற்றும் 64 நாடுகளை சுற்றி வந்த மாரல் என்ற பெண்மணியை தான் நடிகர் அஜித் நேரில் சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் இவர்கள் இருவரும் சந்தித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் மாரலிடம் நடிகர் அஜித் அவரது அனுபவம் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்ததாக தெரிகிறது. எனவே ஒருவேளை வரும்காலத்தில் அஜித்தும் இவரை போல் மோட்டார் சைக்கிளில் உலகை வலம் வந்தாலும் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.