6 மாதம் அல்லோல பட வைத்த அர்ஜுன்.. தேடிப்போய் பதிலடி கொடுத்த இயக்குனர்

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பது பல புதுமுக இயக்குனர்களுக்கும் ஒரு பெரிய கனவாக இருக்கிறது. இதற்காக தங்களுடைய ஸ்கிரிப்ட்டுகளை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கும் ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள்.

அப்படி சினிமா கனவை சுமந்து கொண்டு நல்ல கதை இருந்தும் இயக்க வாய்ப்பு கிடைக்காமல் உதவி இயக்குனராக இருப்பவர்களும் உண்டு. மேலும் தங்களின் கனவுக்கு தடையாக எத்தனை அவமானங்கள் இருந்தாலும் அதை கடந்து முன்னேறி செல்பவர்களும் இருக்கிறார்கள்.

அதேபோல் கையில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் தவறவிடும் சில நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒருவர்தான் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணிபுரிந்த ஹரிஹரன். பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் ஆர் சி சக்தியிடம் இவர் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.

அதன் பிறகு சொந்தமாக ஒரு கதையை தயார் செய்த இவர் பிரபல தயாரிப்பாளரிடம் அதை கூறியிருக்கிறார். அந்த கதை ரொம்ப பிடித்துப் போகவே அவர் நடிகர் அர்ஜுனிடம் இதைப் பற்றி பேசி ஹரிஹரனை கதை சொல்ல அனுப்பி உள்ளார்.

அங்கு சென்ற அவரை பார்த்த அர்ஜுனுக்கு இவரால் ஒரு படத்தை இயக்க முடியுமா என்ற சந்தேகம் வந்திருக்கிறது. இருந்தாலும் அவரை பிறகு ஒருநாள் கதை சொல்ல வாருங்கள் என்று கூறி அனுப்பி இருக்கிறார். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்த நிலையில் ஹரிஹரன், அர்ஜுனிடம் கதை சொல்ல சென்றிருக்கிறார்.

கதையை கேட்பதற்காக அர்ஜுனும் தயாராகவே இருந்திருக்கிறார். ஆனால் ஹரிஹரன் கதை சொல்லும் சமயத்தில் கடந்த ஆறு மாதங்களாக தன்னை அலைக்கழித்த அர்ஜுனுக்கு கதை சொல்ல கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார். அதனால் அவர் அர்ஜுனிடம் இப்போ எனக்கு கதை சொல்ற மூடு இல்லை என்று கூறிவிட்டு வெளியே வந்திருக்கிறார்.

அதன் பிறகு இன்று வரை அவருக்கு ஒரு சினிமாவை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் சீரியல் பக்கம் சென்ற அவருக்கு அங்கேயும் ஒரு சில சீரியல்களுக்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. தற்போது அவர் கிடைத்த வேலையை செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

இந்த தகவலை அவரே ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். இப்போதும் கூட அவர் திரைப்படங்களை இயக்குவதற்கு தயாராகவே இருக்கிறார். ஆனால் அதற்கான வாய்ப்புகள் தான் எனக்கு கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் கூறி இருக்கிறார்.

சினிமாவில் சில விஷயங்களுக்கு கஷ்டப்பட்டு, அனுசரித்துப் போனால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. ஆனால் ஹரிஹரன் போன்ற சில உதவி இயக்குனர்கள் கைக்கு கிடைத்த வாய்ப்பை இப்படி தட்டி விட்டு விட்டு தற்போது அல்லல்பட்டு வருகின்றனர்.