45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி.. அண்ணாத்த பாடல் கேட்டு ரஜினியின் உருக்கமான பதிவு.!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா மற்றும் குஷ்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் அண்ணாத்த. கிராமத்து கதையை மையமாக பக்கா கமர்சியல் படமாக உருவாகி உள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ள அண்ணாத்த அண்ணாத்த என்ற பாடலை இன்று மாலை 6 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர். இதுவரை ரஜினிக்காக பல படங்களில் எஸ்பிபி ஓபனிங் சாங் பாடியுள்ள நிலையில், இந்த பாடலும் ஓபனிங் சாங்காகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கேற்றாற் போல் இப்பாடலும் நம்பிக்கைக்கான வரிகளுடன் அண்ணாத்த ரஜினியின் புகழ்பாடும் பாடலாக அமைந்துள்ளது. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடைசியாக ரஜினிக்காக பாடிய பாடல் என்பதால் இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் எஸ்பிபி குறித்து நடிகர் ரஜினி அவரது டிவிட்டர் பக்கத்தில் மிகவும் உருக்கமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ரஜினி கூறியுள்ளதாவது, “45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்த படத்தில் எனக்காக பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்கு பாடும் கடைசி பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

எஸ்பிபியின் பாடலையும் தமிழ் சினிமாவையும் தனித்தனியாக பிரிக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் இவர் பல பாடல்களை பாடியுள்ளார். இன்றளவும் பலரின் தனிமையை போக்கும் மருந்தாக எஸ்பிபியின் பாடல் இருந்து வருகிறது. அவர் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் அவரது பாடல்கள் மூலம் என்றும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.