4 திரை ஜாம்பவான்களை ஏமாற்றிய சம்பவம்.. ரஜினி படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி பெற்று ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் இவரின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் முள்ளும் மலரும். இயக்குனர் மகேந்திரன் இயக்கிய இந்த திரைப்படம் ரஜினிக்கு ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சரத்பாபு, ஜெயலட்சுமி, சோபா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அண்ணன், தங்கை இருவருக்கும் இடையே இருக்கும் பாசப்பிணைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் குடும்பங்களை கவரும் வகையில் அமைந்தது.

அதோடு இந்தப் படத்தில் இடம்பெற்ற செந்தாழம்பூ, நெல்லுச்சோறு, ராமன் ஆண்டாலும் போன்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது. இந்தப்படம் வெளிவந்த சமயத்தில் செந்தாழம்பூ என்ற பாடல்தான் எங்கு திரும்பினாலும் ஒலித்துக் கொண்டிருந்தது.

அந்த அளவுக்கு இளையராஜா தன்னுடைய அற்புதமான இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் படத்தில் பல காட்சிகளையும் தத்ரூபமாக மக்களுக்கு காட்டியதில் முக்கிய பங்கு ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவுக்கு நிச்சயம் உண்டு.

இப்படி நான்கு திரை ஜாம்பவான்கள் ஒன்று சேர்ந்து வேலை செய்த இந்தத் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் கிடையாது. ஆனால் இவ்வளவு புகழ் பெற்ற இந்த திரைப்படத்திற்கு ஒரு சோதனையும் அப்போது நடந்தது.

அதாவது இந்த திரைப்படத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக ரஜினிகாந்த், பாலுமகேந்திரா, மகேந்திரன், இளையராஜா போன்ற நான்கு பேரும் நேஷனல் அவார்டுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இறுதியில் இந்த நால்வரில் ஒருவருக்கு கூட தேசியவிருது கிடைக்கவில்லை. அவ்வகையில் இப்படம் 4 பேரையும் ஏமாற்றி விட்டது.