21 வருடமாக வெளிவராமல் இருக்கும் லிவிங்ஸ்டன் படம்.. பாட்டு மட்டும்தான் ஹிட் போல

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும் சில காரணங்களால் திரையரங்குகளில் ஒரு சில திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கும். அதிலும் முக்கியமாக சிம்புவின் வேட்டை மன்னன் திரைப்படம் பத்து வருடங்களுக்கு முன்பே இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய நிலையில் தற்போது வரை திரையரங்குகளில் திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இதேபோல பல முன்னணி நடிகர்களின் திரைப்படமும் இன்று வரை கிடப்பில் உள்ளது. அந்த வரிசையில் நடிகரும் கதாசிரியருமான லிவிங்ஸ்டன் திரைப்படமும் சேர்ந்துள்ளது.

நடிகர் மற்றும் கதை ஆசிரியர் ஆன லிவிங்ஸ்டன் தன் திரைப்படங்களின் மூலம் தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்த இவர், வில்லனாகவும் ஹீரோவாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். தற்போது சின்னத்திரையில் நடித்து வரும் லிவிங்ஸ்டன் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதிலும் முக்கியமாக நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வானத்தைப்போல திரைப்படத்தில் விஜயகாந்த்தின் தம்பியாக நடித்து அசத்தியிருப்பார். அதேபோல தல அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

நடிகர் லிவிங்ஸ்டன் நடிப்பில் இயக்குனர் மார்க்ஸ் சரவணன் இயக்கத்தில், இசை அமைப்பாளர் பரணி இசையில் உருவான லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் திரைப்படம் திரையரங்குகளில் இன்று வரைக்கும் வெளியிடப்படவில்லை. 2001ஆம் ஆண்டு ரிலீசாக இருந்த இத்திரைப்படத்தில் நடிகை கௌசல்யா, ராதிகா சவுத்ரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடாமல் போனதற்கு காரணம் அப்படத்தின் தயாரிப்பாளர் ஜானி தானாம்.

இவர் இத்திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடுவதற்கு முன்னாலேயே பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்று விட்டாராம் தயாரிப்பாளர். இதனால் கோபமடைந்த லிவிங்ஸ்டன் தயாரிப்பாளரிடம் கருத்து வேறுபாட்டில் இருந்து வந்தார். மேலும் இவர்களின் மோதல் காரணமாக இப்படத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனமும் இன்றுவரை இத்திரைப்படத்தை வெளியிடாமல் உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ லான்ச் விழா நடைபெற்று படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி தற்போதுவரை இணையத்தில் உள்ளது.