21 வருடங்களுக்கு பின் தளபதி66யில் இணையும் பிரபலம்.. நண்பனா நடிச்சவரே இப்ப அண்ணனா நடிக்கிறார்

பீஸ்ட்’ படத்திற்கு பிறகு ‘தளபதி 66’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை தில் ராஜூவின் நிறுவனம் தயாரித்து வருகிறது. தமன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்தின் கதைப்படி விஜய்க்கு இரண்டு அண்ணன்களாம். அதில் ஒருவராக நடிகர் சரத்குமார் ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியிருந்ததார். இன்னொரு அண்ணனாக முதலில் நடிகர் மோகன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலில் உண்மையில்லை என்று நடிகர் மோகனே கூறிவிட்டார். இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் தற்போது நடிகர் ஷ்யாம், ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது தகவல் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

முதலில் மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஷ்யாம், 2001ஆம் ஆண்டில் வெளிவந்த 12B திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அப்போது முன்னணி நடிகைகளாக இருந்த சிம்ரன், ஜோதிகா ஆகியோருடன் ஜோடி போட்ட நடித்த இவருக்கு இந்த படம் ஓரளவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

அதன் பின்னர் லேசா லேசா, இயற்கை மற்றும் உள்ளம் கேட்குமே, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, ஏபிசிடி, பாலா என 20க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக தோன்றினார். இதில் உள்ளம் கேட்குமே மட்டுமே சொல்லி கொள்ளும் அளவிற்கு வெற்றி படமாக அமைந்தது. நடுவில் கன்னட படம் ஒன்றிலும் நடித்திருந்தார். பெரிதும் வெற்றி படங்கள் இல்லாத இவர் தெலுங்கில் வெளியான கிக் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் ரீமேக்கான தில்லாலங்கடியிலும் நடித்திருந்தார்.

நாயகனாக நடிப்பதை விட்டு துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய இவருக்கு தெலுங்கில் தொடர்ந்து அவ்வாறான ரோல்கள் அமைந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 6 என்று படத்தில் நடித்திருந்தார். கண்ணிற்கு கீழே பெரிய வீக்கத்துடனான ஒரு தோற்றத்தைப் பெற, ஷாம் பத்து நாட்களுக்கும் மேலாக தூங்காமல் இருந்தார், இதன் விளைவாக அவரது கண்களுக்குக் கீழே ஒரு பெரிய வீக்கம் ஏற்பட்டது. இந்த படம் அவருக்கு நல்ல விமர்சனங்களைப் பெற்று தந்ததுடன், நல்ல வெற்றியும் பெற்றது.

அதன் பின் மீண்டும் சில படங்களில் நாயகனாக நடித்த கையோடு தற்போது மீண்டும் துணை நடிகராக நடித்து வருகிறார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஷ்யாம் நாயகனாக அறிமுகம் ஆவதற்கு முன் தோன்றிய படம் குஷி. அதில் விஜயுடன் அவருக்கு நண்பராக நடித்திருப்பார். மீண்டும் தற்போது அவருக்கே அண்ணனாக நடிக்கவுள்ளார்.