தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரை ரசிகர்கள் அனைவரும் செல்லமாக தளபதி என அழைப்பார்கள். ரசிகர்களிடம் மிகவும் அன்பாக பழகுவதால் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்தில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி விஜய் படங்களுக்கு கேரளாவில் மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது விஜய் இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் கூட்டணி அமைத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகி வரும் பீஸ்ட் படம் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. பிரபல நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள பீஸ்ட் படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

தற்போது விஜய் ரசிகர்கள் அனைவரும் பீஸ்ட் படத்திற்காக வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்டுகளை படக்குழுவினர்கள் வெளியிட்டு ரசிகர்களிடையே படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் மேலும் அதிகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி விஜயின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் பைலிங்குவல் படத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. விஜயின் 66வது படமாக உருவாக உள்ள இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளாராம். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதவிர நடிகர் விஜய் இயக்குனர் அட்லி இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் புதிய படத்தில் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளதால், விஜய் ரசிகர்களை கவர்வதற்காக விஜயை இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க அட்லி திட்டமிட்டுள்ளாராம்.

அட்லீ இயக்கத்தில் ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்துள்ளார். இம்மூன்று படங்களும் விமர்சனங்களைத் தாண்டி மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல் வசூலிலும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. எனவே விஜய் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.