வைரலாகும் நாய்சேகர் படத்தின் பர்ஸ்ட் லுக்.. வடிவேலுவை வெறுப்பேற்ற அவசரமா வெளியான போஸ்டர்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் காமெடி நடிகர் வடிவேலு நடிக்கும் படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு வைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம் ஏற்கனவே நாய் சேகர் என்ற தலைப்பை மூறையாக பதிவு செய்துள்ளதாக கூறிவந்தனர். இந்நிலையில் நாய் சேகர் என்ற தலைப்பில் உருவாக உள்ள படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சுந்தர் சி நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும். இந்நிலையில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ள படத்திற்கு நாய் சேகர் என்ற தலைப்பை வைக்கலாம் என படக்குழுவினர் பேசி வந்தனர். ஆனால் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யாமல் இருந்தனர்.

இதற்கிடையில் காமெடி நடிகர் சதீஷை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் காமெடி படத்திற்கு நாய் சேகர் தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பதால் படக்குழுவினர் இந்த தலைப்பை முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து, அந்த தலைப்பை தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டனர்.

இருப்பினும் இந்த தலைப்பு வடிவேலுவிற்கு தான் பொருத்தமாக இருக்கும் எனக்கூறி சுராஜ் மற்றும் லைகா தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் ஏஜிஎஸ் நிறுவனமோ தலைப்பை விட்டுக்கொடுக்க மறுப்பு தெரிவித்து விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறினார்கள்.

அதன்படி காமெடி நடிகர் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி இணைந்து நடித்துள்ள நாய் சேகர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று மாலை வெளியானது. இதனை பிரபல நடிகரும், சதீஷின் நண்பருமான சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சதீஷ் மற்றும் ஒரு நாயை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருவதால், இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என எண்ணி படக்குழுவினர் இந்த தலைப்பை உறுதி செய்துள்ளனர்.

இருப்பினும் நாய் சேகர் என்றாலே அது வடிவேலு மட்டும் தான். அவரது பெயரில் வேறொரு நடிகரை பார்க்க இயலாது என்பதே ரசிகர்களின் பரவலான கருத்தாக உள்ளது. மேலும் வடிவேலுக்காகவாவது இந்த தலைப்பை விட்டுக் கொடுத்திருக்கலாம் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.