திரையுலகில் தங்களுடன் நடிக்கும் சக நடிகர் நடிகைகளை காதலித்து திருமணம் புரிவது என்பது பெரும்பாலும் வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையிலேயே அதிகம் நிகழ்கிறது. காரணம் ஒரு சீரியல் என்பது கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்காவது ஒளிபரப்பப்படும். எனவே தன்னுடன் பயணிக்கும் சக நடிகர் நடிகைகளை பற்றிய புரிதல் ஏற்பட்டு வாழ்க்கையின் இறுதிவரை இவர்களோடு பயணிக்கலாம் என்ற முடிவுக்கு வழிவகுக்கிறது. ஆனால் திரைப்படமோ குறைந்தபட்சம் ஆறு மாத காலத்திற்குள் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிடும். எனவேதான் சீரியலில் நடிக்கும் பல ஜோடிகள் தற்போது நிஜ ஜோடிகள் ஆக மாறி வரும் சம்பவம் அரங்கேறுகிறது.

அந்த விதமாக பல ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாறி உள்ளன. உதாரணமாக சாயாசிங் – கிருஷ்ணா, ஆலியா – சஞ்சீவ், ஆரியன் – ஷபானா மற்றும் மதன்- ரேஷ்மா போன்றோர். சமீபத்தில் ஆரியன் – ஷபானா தம்பதியினரும், மதன் ரேஷ்மா தம்பதியினரும் திருமணபந்தத்தில் புதிதாக அடியெடுத்து வைத்துள்ளன.

சாயாசிங் கன்னடத் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் தமிழ்த் திரையுலகில் கால் பதித்து ஒரு கலக்கு கலக்கி வந்தவர். இவர் ‘திருடா திருடி’ ௭ன்னும் சூப்பர் ஹிட் படம் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும், இவர் ‘ஆனந்தபுரத்து வீடு’ என்னும் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்த கிருஷ்ணா என்பவரை காதலித்து மணந்தார். மேலும் சாயாசிங் மற்றும் கிருஷ்ணா தம்பதிகள் இணைந்து சன் டிவியில் ‘ரன்’ என்னும் சீரியலில் ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஸ்டார் ஜோடியாக உள்ளனர்.

இதைத்தொடர்ந்து ‘மானாட மயிலாட’ என்னும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, பிறகு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்து நடிகையாக மாறியவர் ஆலியா மானசா. இவர் விஜய் டிவியில் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதில் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவையே தனது ரியல் ஜோடியாக தேர்வு செய்து, இரு மனமும் திருமணத்தில் இணைந்து மக்களின் சின்னத்திரை ஜோடியாக வலம் வருகின்றனர்.

இதனை அடுத்து ஒரு புரியாத புதிராகவே உள்ள ஜோடி ஆரியன் – ஷபானா ஜோடி. ஜீ தமிழில் ‘செம்பருத்தி’ சீரியலில் நடித்து மிகவும் பிரபலமடைந்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டவர் நடிகை ஷபானா. அதைப்போல் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர், நடிகர் ஆரியன். அவ்வபோது இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று இணையத்தில் பரவிய போதெல்லாம் காதலை ரகசியமாக வைத்திருந்த ஆரியன்- ஷபானா ஜோடி திடீரென திருமணத்தையே இணையத்தில் வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இவர்களைத் தொடர்ந்து வெளிப்படையாக தங்கள் காதலை பல மேடைகளிலும் ரியாலிட்டி ஷோக்களிளும் வெளிப்படுத்திய ஜோடி மதன் – ரேஷ்மா ஜோடி. நடிகை ரேஷ்மா ஜீ தமிழில் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் மூலம் அறிமுகமானவர். இதே சீரியலில் இவரின் அக்கா கணவராக நடித்தவர் மதன். இவர்கள் இருவரும் இந்த சீரியலில் நடிக்கும்போதே காதலித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘அபி டெய்லர்’ சீரியலில் ரீல் ஜோடிகளாக இருவரும் நாயகன் நாயகியாக நடித்த நிலையில், தற்பொழுது ரியல் ஜோடிகளாக திருமண பந்தத்தில் இணைந்து விட்டனர். இவ்வாறு மக்களுக்கு விருப்பமான ஸ்டார் ஜோடியாகவும் திகழ்கின்றனர்.