வெந்து தணிந்தது காடு படத்தில் காட்டுத்தனமா நடிக்கும் சிம்பு.. கையில் கட்டுடன் வெளிவந்த அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் இளம் நடிகரான சிம்பு நடிப்பில் தற்போது மாநாடு மற்றும் மஹா ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதுதவிர இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்ற படத்திலும், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்திலும் சிம்பு நடித்து வருகிறார்.

இதில் சிம்பு மற்றும் கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படம் சிம்புவின் 47வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்கு பின்னர் சிம்பு, கெளதம்மேனன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படமும் இதுதான். எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படம் முற்றிலும் கிராமத்து பின்னணியில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வருகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் கெளதம் மேனன் மற்றும் சிம்பு படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம், “விரைவில் மும்பையில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்தின் சண்டை காட்சிகள் மிகவும் அருமையாக வந்துள்ளது. இதற்காக சிம்பு மிகவும் கடுமையாக உழைத்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்காக சிம்பு அவரது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து புதிய தோற்றத்தில் காட்சி அளிப்பதால், படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.