விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் எப்படி இருக்கு? அதிரடியாக வெளிவந்த ட்விட்டர் விமர்சனங்கள்

ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷால் தற்போது நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் எஃப் ஐ ஆர். ஆக்ஷன் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இப்படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீவிரவாதத்தை பற்றிய கதை களத்தை கொண்ட இந்த திரைப்படத்தின் டீசரில் வெளியான அனைத்து காட்சிகளும் பயங்கர மிரட்டலாக இருந்தது.

தற்போது இந்த படத்தின் பிரிவியூ காட்சியை பார்த்தவர்களின் கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த அனைவரும் விஷ்ணு விஷாலின் அற்புதமான நடிப்பை பிரமித்துப் போய் பாராட்டி வருகின்றனர். படத்தின் முதல் பகுதி யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இருக்கிறதாம்.

மேலும் படத்தில் ரைசா வில்சன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற கதாபாத்திரங்களும், புத்திசாலித்தனமான திருப்பங்களும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. அதிலும் படத்தின் எடிட்டிங், பின்னணி இசை என்று அனைத்தும் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விஷ்ணு விஷால் இந்த திரைப்படம் தனக்கு ஒரு மிகப்பெரிய கம் பேக் படமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே இந்த படத்தில் தன்னுடைய மிரட்டலான நடிப்பு மூலம் மீண்டும் ஒரு முறை தன்னை நிரூபித்து இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அபூபக்கர் அப்துல்லா எனும் கேரக்டரும், இந்த கதையும் நிஜ வாழ்வில் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த ப்ரிவ்யூ காட்சிகளைப் பார்த்துவிட்டு வந்த அனைத்து விமர்சனங்களும் பாசிட்டிவ் ஆகவே இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிட இருக்கும் இந்தத் திரைப்படம் வரும் 11ஆம் தேதி திரையரங்குகளை அலங்கரிக்க இருக்கிறது.