லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அத்துடன் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதி மற்றும் நாயகியின் காட்சிகளை தற்போது படமாக்க திட்டமிட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்குப் பின்னர் கமல்ஹாசன் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றினை படக்குழு பகிர்ந்துள்ளனர். ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நிற்க பைக்கில் கமல்ஹாசன் கெத்தாக அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.