தமிழ் சினிமாவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர் கலா மாஸ்டர். கமல், ரஜினி, விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவர் பணிபுரிந்துள்ளார்.

அதுமட்டுமல்லாது கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தார். இவர் தமிழக அரசின் விருதுகள், தேசிய விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

நடனத்தால் மட்டுமே நமக்கு அறிமுகமான கலா மாஸ்டர் தற்போது ஒரு நடிகையாகவும் வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகும் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் தான் கலா மாஸ்டர் அறிமுகமாக உள்ளார்.

இந்தப் படத்தில் ஒரு கேரக்டருக்கு கலா மாஸ்டர் தான் பொருத்தமாக இருப்பார் என்று விக்னேஷ் சிவன் நினைத்துள்ளார். அதனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கலா மாஸ்டரிடம் இதுபற்றி கூறியுள்ளனர்.

அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக கலா மாஸ்டரும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. டான்ஸ் மாஸ்டரான கலா வெள்ளித்திரையில் நடிக்க இருப்பது திரையுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. டான்ஸ் மாஸ்டர் பலரும் நடிக்க வருவது திரையுலகில் ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் கலா மாஸ்டரும் தற்போது இணைந்துள்ளார்.