தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான சூரரைப்போற்று படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதனை தொடர்ந்து சூர்யாவின் மார்க்கெட் எகிறியுள்ளது என்பது தான் கூற வேண்டும்.

தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் எனும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படம் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. இதனை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் இப்படத்தில் நடிகர் சூர்யாவின் கெட்டப்பும் வெறித்தனமாக இருப்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதேபோல் இப்படத்தில் பிரபல இயக்குனர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் அமீரின் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதில் மொட்டை தலை, முறுக்கு மீசை, கட்டுமஸ்தான உடல் என பார்ப்பதற்கே பயங்கர தோற்றத்தில் அமீர் காட்சியளித்திருந்தார்.

தற்போது வாடிவாசல் படத்தில் இயக்குனர் அமீரின் கதாபாத்திரம் குறித்த செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது இப்படத்தில் இயக்குனர் அமீர் மருதன் எனும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இது படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாம். மேலும் நடிகர் சூர்யா மனைவியின் அண்ணனாக படத்தில் அமீர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

அமீர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக உருவெடுத்துள்ளார். இயக்குனர்கள் படங்களில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் ஒரு இயக்குனராக தன்னை நிரூபித்த அமீர் தற்போது நடிகராகவும் தன்னை நிலைநாட்டி வருகிறார். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் ராஜன் என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே போல் வாடிவாசல் படத்திலும் இவருக்கு ஒரு பவர்ஃபுல்லான கதாபாத்திரமே கொடுக்கப்பட்டிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.