தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி இதர நடிகர்களின் ரசிகர்களும் அஜித்தை விரும்பும் அளவிற்கு எளிமையான குணம் கொண்டவர் தான் நடிகர் அஜித். அவரது எளிமையான தோற்றமும், பணிவான குணமும் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது.

இறுதியாக வெளியான நேர்கொண்டபார்வை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுவதும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக வலிமை படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இச்செய்தியைக் கேட்டு அஜித் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் ஏற்கனவே வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி வைரலான நிலையில், சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் அதாவது படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியானது. ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது. இதன் மூலம் படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் படம் குறித்த மற்றொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வலிமை படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான ஜி5 நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் மற்றும் ஜீ திரை வாங்கியுள்ளதாகவும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.