வடிவேலுவின் கேரக்டர் பெயரை பட தலைப்பாக வைத்த யோகி பாபு.. அட இது வேர்ல்டு ஃபேமஸ் ஆச்சே

தமிழ் சினிமாவில் தற்போது காமெடியில் கலக்கி வரும் ஒரே ஒரு நடிகர் என்றால் அது யோகி பாபு மட்டுமே. கவுண்டமணி, செந்தில், விவேக் மற்றும் வடிவேலு போன்ற நடிகர்கள் தற்போது இல்லாததால், தமிழ் சினிமாவில் ஏற்பட்ட வெற்றிடத்தை யோகி பாபு நிரப்பி வருகிறார். முன்னணி ஹீரோக்களை விட அதிக படங்களை கைவசம் வைத்துள்ள ஒரே ஒரு நடிகர் யோகிபாபு மட்டுமே.

முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக மட்டும் நடிக்காமல், காமெடியை மையமாக வைத்து உருவாகி வரும் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள பேய்மாமா எனும் படம் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதுதவிர இளைஞர்களின் ஃபேவரைட் நாயகியான ஓவியாவுடன் இணைந்து ஒரு படத்தில் யோகி பாபு நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு கான்ட்ராக்டர் நேசமணி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஸ்வதீஷ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி மன்னனாக வலம் வந்த நடிகர் வடிவேலு ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவரது காமெடி எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகிறதோ அதே அளவிற்கு அவரது கதாபாத்திரங்களின் பெயர்களும் பிரபலமாக உள்ளன. சமீபகாலமாக வடிவேலுவின் பிரபலமான கதாபாத்திரங்களின் பெயர்களை படத்திற்கு தலைப்பாக வைத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் காமெடி நடிகர் சதீஷ் நடிக்கும் படத்திற்கு வடிவேலுவின் பிரபல கதாபாத்திரத்தின் பெயரான நாய் சேகர் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது யோகிபாபுவின் படத்திற்கும் பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் பெயரான கான்ட்ராக்டர் நேசமணி என்ற தலைப்பை வைத்துள்ளனர். வடிவேலுவின் கேரக்டர் பெயரை தலைப்பாக வைத்தால் மட்டும் போதாது. அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு படமும் வெயிட்டாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.