ரஜினிக்கு பிறகு பிரபல நடிகரை இயக்கவுள்ள நெல்சன்.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள கூட்டணி

கோலமாவு கோகிலா படத்தில் இயக்குனராக அறிமுகமான நெல்சன் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் டாக்டர், விஜயுடன் பீஸ்ட் என அடுத்தடுத்து படங்கள் இயக்கி தற்போது முக்கியமான ஒரு இயக்குனராக உருவெடுத்துள்ளார். அவரின் முதல் இரண்டு படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் விஜயின் பீஸ்ட் அதற்கு விதிவிலக்காக அமைந்தது. சுமாரான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் படம் வணிக ரீதியாக முதலுக்கு மோசமில்லாமல் முடிந்துள்ளது.

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் தளபதி விஜய்யின் பீஸ்ட் ஆகிய மூன்று படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் டார்க் ஹ்யூமர் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரைப் பெற்றுள்ள நெல்சன் திலீப்குமார், பீஸ்ட் பட வெளியீட்டிற்கு முன்பே ரஜினியின் அடுத்த படத்தைஇயக்க உள்ளதாக அதனை தயாரிக்க உள்ள சன் பிக்சர்ஸ் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தார்.

பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் ரஜினியின் அடுத்த படம் கைவிட்டு போனது என செய்திகள் வெளியாகி சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு தீனி போடும் வகையில் தனது ட்விட்டரில் தலைவர் 169 இயக்குனர் என்ற பயோ’வை சில நாட்கள் முன்பு நீக்கி தற்போது மீண்டும் இணைத்துள்ளார் நெல்சன். ஆகையால் அவர் ரஜினியுடன் நிச்சயமாக இணைந்து படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இந்த குழப்பம் தற்போது வரை தீரவில்லை. ஆனால் உறுதியாக படமெடுத்து நல்ல விமர்சனங்களைப் பெற்று விட வேண்டுமேன நெல்சன் கடுமையாக முயற்சித்து வருகின்றார். நெல்சனின் இந்த படமே இன்னமும் உறுதியாக எடுக்கப்படுமா என்ற குழப்பமான நிலையில், அவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைவர் 169 படத்திற்கு பிறகு நெல்சன் அடுத்ததாக நடிகர் தனுஷுடன் இணையவுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன. ரஜினிக்கு கதை கூறிய பிறகு நடிகர் தனுஷை சந்திக்க வாய்ப்பு கிடைக்க அவருக்கும் ஒரு கதை கூறியிருக்கிறார் நெல்சன். அந்த கதை தனுஷுக்கு பிடித்து போக அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து இன்னமும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் ரஜினிக்கு அடுத்து தனுஷை நெல்சன் இயக்கவுள்ளார் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தனுஷ் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய படங்களை முடித்துவிட்டு வாத்தி படத்தை முடிக்கும் தருவாயில் இருக்கின்றார். அவரது அடுத்த படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கவுள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது, அதன் பிறகு நெல்சன் படம் தொடங்க வாய்ப்புள்ளது. பன்முகத்தன்மை வாய்ந்த தனுஷை ஒரு டார்க் காமெடியில் நடித்தால் படம் சிறப்பாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.