ரசிகர்கள் கொண்டாடிய மலையாளத் திரைப்படங்கள்.. எரிச்சலடைய வைத்த கூகுள் குட்டப்பா

பிறமொழிகளில் வெற்றி பெறும் திரைப்படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது சினிமாவில் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். அதிலும் நம் தமிழ் சினிமா சமீப காலமாக மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படங்களை ரீமேக் செய்து வருகிறது.

அந்த வகையில் தமிழில் சமீபத்தில் வெளியான ஹாஸ்டல், கூகுள் குட்டப்பா, விசித்திரன், பயணிகள் கவனிக்கவும் போன்ற பல திரைப்படங்களும் மலையாள ரீமேக் படங்கள்தான். அதில் விதார்த்தின் மாறுபட்ட நடிப்பில் வெளியான பயணிகள் கவனிக்கவும் திரைப்படம் தற்போது பாராட்டுகளை பெற்று வருகிறது.

இருப்பினும் மலையாள படத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த படத்தில் சில உணர்வுபூர்வமான காட்சிகள் அந்த அளவிற்கு இல்லை என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும் கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இதேபோன்று சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் கே எஸ் ரவிக்குமாரின் நடிப்பு பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அதிலும் சென்டிமென்ட் காட்சிகளில் அவர் நிறைய மெனெக்கெட்டு நடித்து இருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் ஒரிஜினல் மலையாள திரைப்படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தில் வரும் சுராஜ் கதாபாத்திரம் உணர்ச்சிகளை வெளியே காட்டாமல் மிகவும் இறுக்கமான முகத்துடன் இருக்குமாறு காட்டப்பட்டிருக்கும். அப்படி இருப்பவர் ரோபோவின் வருகையால் எப்படி மாறுகிறார் என்பதை தத்ரூபமாக காட்டி இருப்பார்கள்.

அந்த சில விஷயங்களை கூகுள் குட்டப்பாவில் காட்ட தவறி இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. மேலும் பல விஷயங்களும் கதாபாத்திரத்திற்கு முரண்பாடாக இருக்கிறது. அதனால் தான் இப்படம் தற்போது ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகி உள்ளது. அதே போன்று தான் ஹாஸ்டல் திரைப்படமும் ரசிகர்களை கவர தவறியிருக்கிறது.

மலையாளத்தில் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது ஹாஸ்டல் படத்தை பார்த்து முற்றிலும் வெறுத்துப் போய் இருக்கின்றனர். இப்படி மலையாளத்தில் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்கள் அனைத்தும் தமிழ் ரசிகர்களை ஒரு வழியாக்கி வருகிறது.

அதில் சற்று தப்பித்த திரைப்படம் என்றால் அது ஆர்கே சுரேஷ் நடிப்பில் வெளியான விசித்திரன் திரைப்படம் தான். மலையாளத் திரைப்படத்தில் இருக்கும் அந்த உணர்வு பூர்வமான கதைக்கருவை அப்படியே தமிழில் இயக்குனர் கொடுத்துள்ளார். தமிழ் ரசிகர்களுக்காக எந்தவிதமான செயற்கைத் தனமும் இல்லாமல் இப்படம் வெளியாகி இருக்கிறது.

மற்றபடி மலையாளத் திரைப்படங்களை பார்த்து தமிழில் நன்றாக இருக்கும் என்று எதிர் பார்க்கும் ரசிகர்களுக்கு அந்த திரைப்படங்கள் யாவும் ஏமாற்றத்தை தான் பரிசாக கொடுக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் இனிமேல் மலையாள படங்களை யாரும் தமிழில் ரீமேக் செய்யாதீர்கள் என்று வெளிப்படையாகவே கதறி வருகின்றனர்.