திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நடிகர்கள் பின்னாளில் வளர்ந்து ஹீரோ மற்றும் ஹீரோயினாக மாறுவது வழக்கமான ஒன்றுதான். அப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் கலக்கிய மகேந்திரன் விழா படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து விந்தை எனும் படத்திலும் நடித்திருந்தார்.

இருப்பினும் சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் தான் மகேந்திரனுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது என கூறலாம். இப்படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாப்பாத்திரத்தில் குட்டி பவானியாக மகேந்திரன் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

இதனையடுத்து மகேந்திரனின் மார்க்கெட் உயர தொடங்கியது. தற்போது மணிகாந்த் தலக்குட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள அர்த்தம் என்ற படத்தில் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக ஷ்ரத்தா தாஸ் நடித்துள்ளார். த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

அர்த்தம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் வித்தியாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டரை மகேந்திரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், படம் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதவிர இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மட்டும் ஹிட்டானால் இனி நம்ம குட்டி பவானிய பல படங்களில் ஹீரோவா பார்க்கலாம்.