நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை அடுத்து பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளது தெரிந்த ஒன்றுதான். விஜய்யின் இத்தனை ஆண்டுகால திரை வாழ்க்கையில் முதல் முறையாக தமிழ் மொழி அல்லாத பிற மொழி படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் இந்த படம் தெலுங்கு மட்டும் அல்லாமல் இதர மொழிகளிலும் உருவாவதால் இப்படத்திற்காக மட்டும் விஜய் சுமார் 120 கோடி ரூபாய் சம்பளம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கோலிவுட்டில் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெருமையை நடிகர் விஜய் பெற்றார்.

இந்நிலையில் நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 66 படத்தை தொடர்ந்து அடுத்ததாக தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தில் விஜய்க்கு 100 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அனேகமாக மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கும் படத்தை தான் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருப்பதாகவும், அந்த படத்தில் தான் விஜய்க்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தையும், விஜய் இயக்குனர் வம்சி படத்தையும் முடித்த பின்னர் இதில் இணைவார்கள் என எதிர்பார்க்கலாம். மேலும் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தை தாணு தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி தளபதி 66 படத்திற்கு 120 கோடி, தற்போது தாணு படத்திற்கு 100 கோடி என விஜய் சம்பளம் அதிகரித்து இருந்தாலும் பல தயாரிப்பாளர்கள் அவருக்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வழங்க தயாராக உள்ளார்களாம். ஏனெனில் விஜய் படம் என்றால் எப்படியும் போட்ட பணத்தை இரண்டு மடங்காக எடுத்து விடலாம் என்ற நம்பிக்கை தான்.