தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் ஹரி. இவரது இயக்கத்தில் வெளியான சாமி, சிங்கம், வேங்கை, பூஜை, தாமிரபரணி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இறுதியாக ஹரி இயக்கத்தில் வெளியான சாமி 2 படம் தோல்வியை தழுவியது. இதனை அடுத்து சில நாட்கள் படங்களை இயக்காமல் இருந்தார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிரபல நடிகரும், ஹரியின் மச்சானுமான அருண் விஜயை வைத்து தற்போது புதிய படம் ஒன்றை ஹரி இயக்கி வருகிறார். இப்படத்திற்கு யானை என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், படத்தின் போஸ்டர்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் யானை படத்தை நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகும் அதே நாளில் வெளியிட இயக்குனர் ஹரி முடிவு செய்துள்ளாராம். இவ்வாறு சூர்யாவுடன் ஹரி போட்டியிட ஒரு முக்கிய காரணமும் உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது முன்னதாக சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் அருவா என்ற படம் உருவாக இருந்தது. ஆனால் சூர்யா மற்றும் ஹரி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது. எனவே தான் இயக்குனர் ஹரி தன்னை நிரூபிக்கும் விதமாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகும் அதே நாளில் தனது யானை படத்தை வெளியிட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளாராம்.

சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவான சிங்கம் 1,2,3 மற்றும் வேல், ஆறு ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. சிங்கம் படம் மூலமே சூர்யாவிற்கு ஒரு ஹீரோ என்ற இமேஜ் உருவானது எனவும் கூறலாம். இப்படி இயக்குனர் ஹரியின் ஆஸ்தான நடிகராக இருந்த சூர்யாவிற்கும், ஹரிக்கும் இடையே உருவாகி உள்ள இந்த பிரச்சனை கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.