மக்களை அடிமையாக்கிய ஆன்லைன் வர்த்தகம்.. அமேசான் என்னும் அரக்கன் உருவான கதை

வணக்கம் அன்பு நேயர்களே. நமது சினிமா பேட்டை வலைத்தளத்தில் தொடர்ந்து பல பணக்காரர்களின் வாழ்க்கையையும் அவர்களின் தொழில் அர்ப்பணிப்பையும் பற்றி தொடர் கட்டுரையாக கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் காணவிருக்கும் உலகப் பணக்காரர் அமேசான் நிறுவனத்தின் தலைவர், ஜெஃப் பெஸாஸ்.

இன்றைய தேதியில் மக்கள் அதிகம் பொருட்களை வாங்கும் முறையில் முன்னிலையில் இருப்பது அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட அமேசான் நிறுவனம் தான். ஆன்லைனில் பொருட்களை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களிலேயே முன்னணி நிறுவனம் அமேசான். அமேசான் வலைத்தளத்தில் கிடைக்காத பொருட்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு வரட்டியிலிருந்து விமான பாகங்கள் வரை அனைத்தும் கிடைக்கும் வலைத்தளம் அமேசான். இந்நிறுவனத்தை தொடங்கியவர் ஜெஃப் பெஸாஸ். அவருடைய வாழ்க்கையைப் பற்றி இங்கு காணலாம்.

1964ம் வருடம் அமெரிக்காவில் பிறந்த ஜெஃப் தனது கல்லூரிப் படிப்பை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக முடித்தார். அவர் எலக்ட்ரிக்கல் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பொறியியல் படிப்பை ஆர்வமுடன் படித்திருந்தார். முதன் முதலில் அவருக்கு அமேசான் என்னும் தொழில் தொடங்குவதற்கு உந்துதலாக இருந்தது அவருக்கு இருந்த புத்தக வாசிப்பு நாட்டமே.

எனவே முதன் முதலில் ஆன்லைனில் புத்தகங்கள் மட்டுமே விற்பனை செய்யும் வலைத்தளமாக அமேசான் நிறுவனத்தை வடிவமைத்தார். அவர் வடிவமைத்து இருந்தது பலருக்கு பிடித்துப் போனது. புத்தகங்களை எளிதாக தேர்ந்தெடுக்கும் முறையும், மிக மிக எளிதான பணம் செலுத்தும் முறையும் கொண்டிருந்த காரணத்தால் வெகு சீக்கிரமே அமேசான் வலைத்தளம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்தது.

ஆரம்பத்தில் புத்தகங்களை மட்டுமே விற்பனை செய்து வந்த அமேசான் நிறுவனம் படிப்படியாக வளர்ச்சி பெற்றது. வாரத்திற்கு 20 ஆயிரம் டாலர் வரை சம்பாதிக்கும் அளவுக்கு தொழில் சிறப்பாக நடைபெற்றது. இதன் மூலம் மேலும் நம்பிக்கை பெற்ற ஜெஃப் சிடிக்கள், வீடியோ கேம்கள், பொம்மைகள் என்று தனது விற்பனைப் பொருட்களை அதிகப்படுத்தினார். மேலும் அவர் விளையாட்டு வீரர்களையும் இளம் வயதினரையும் கவர்வதற்காக விளையாட்டுப் பொருட்களையும் அறிமுகம் செய்தார். இதற்கு அவருக்கு கைமேல் பலன் கிடைத்தது.

அவருடைய வணிகம் வேகமாய் வளர்ந்தது. இந்த பொருட்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் அவர் மேலும் ஒரு படி முன்னேறி ஆன்லைனில் உடைகள் விற்பனை செய்யவும் தொடங்கினார். ஆரம்பத்தில் உடைகளின் தரமும் சைசும் எப்படி இருக்கும்? என்று யோசித்த மக்கள், அவை பொருந்தாத பட்சத்தில் திரும்ப கொடுத்து விடலாம் என்ற வாக்குறுதியை நம்பி வாங்க ஆரம்பித்தனர். காலப்போக்கில் அமேசான் நிறுவனத்தில் அதிகம் விற்பனையாகும் பொருளாக உடை மற்றும் சார்ந்த பொருட்கள் மாறியது என்பது வேடிக்கை.

1997 ஆம் ஆண்டு பங்கு வர்த்தகத்தில் காலடி எடுத்து வைத்தது அமேசான் நிறுவனம். இதன் மூலம் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிக்க ஆரம்பித்தார். பங்கு வணிகத்தில் நுழைந்து அதன் மூலமாக அவருக்கு 300 மில்லியன் டாலர்கள் வரவாக இருந்தது. மேலும் அவர் 100 டாலர்களுக்கு மேல் வாங்கும் உபயோகிப்பாளர்களுக்கு இலவச டெலிவரி, குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு டிஸ்கவுண்ட், போன்று எண்ணற்ற சலுகைகளை வாரி இறைத்தார். இதனால் வெகு சீக்கிரமே ஈபே நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி அமேசான் நிறுவனம் முன்னிலை வகிக்க தொடங்கியது.

ஆன்லைனில் வர்த்தகம் மட்டுமே செய்துகொண்டிருந்த அமேசான் நிறுவனம் 2005ஆம் ஆண்டு அடுத்த கட்டத்திற்கு சென்றது. அமேசான் ப்ரைம் எனப்படும் சந்தா செலுத்தி திரைப்படங்களைக் காணும் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் மக்கள் வீட்டிலிருந்தபடியே குறைவான பணம் செலுத்தி படங்களை டிவியிலேயே பார்க்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதேபோல 2007 ஆம் ஆண்டு கிண்டில் எனப்படும் கையடக்க மென்பொருள் புத்தகம் வாசிக்கும் கருவியை அறிமுகப்படுத்தினார் ஜெஃப்.

2014ஆம் ஆண்டில் வெற்றியையும் தோல்வியையும் சமமாக சந்தித்தார் ஜெஃப். ஆம் அவர் அறிமுகம் செய்த ஃபயர் என்ற அமேசானின் ஸ்மார்ட்போன் மிகப்பெரும் தோல்வியை கண்டது. இதனால் இவருக்கு 170 மில்லியன் டாலர்கள் வரை நஷ்டம் ஆனதாக கூறப்படுகிறது. அதே வருடம் இவர் அறிமுகப்படுத்திய எக்கோ என்னும் ஸ்பீக்கர் மாடல் நல்லதொரு கவனிப்பைப் பெற்றது. அதன் மூலம் இன்று பல உபகரணங்களை உட்கார்ந்த இடத்தில் இருந்தே உபயோகிக்க முடிகிறது.

இப்படி தொடர்ந்து நல்ல பொருட்களையும், மக்கள் விரும்பிய வகையில் புதுமைகளைப் புகுத்திய காரணத்தால் அமேசான் நிறுவனத்தின் சொத்து மதிப்பும் வர்த்தக பங்கின் விலையும் ஏற்றம் கண்டது. 2018 ஆம் ஆண்டு ஜெஃப் அவர்களின் வணிக சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலருக்கும் மேலாக பதிவானது. இதன் மூலம் தொடர்ந்து உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் இருந்தார் ஜெஃப். 2021 ஆம் ஆண்டு விண்வெளிக்கு செல்வதற்காக 205 கோடி செலவு செய்துள்ளார்.

ஜெஃப் அவர்கள் தனிப்பட்ட முறையில் நல்லதொரு குடிமகனாகவே இருந்தார். அவர் தனது மெக்கன்சி எஸ்கார்ட் என்னும் மனைவியுடன் 26 வருடங்கள் வாழ்ந்த பின்பு விவாகரத்து செய்தார். பிரெஸ்டன் பெசாஸ் என்று அவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

புத்தகங்கள் பலருக்கு நல்லதொரு வாழ்க்கை முறையை அமைத்துக் கொடுத்திருக்கிறது என்று கூறுவார்கள். ஆனால் புத்தகங்களை கொண்டே தனது வாழ்க்கை முறையை மேலும் மேலும் முன்னேற்றி கொண்டார் ஜெஃப் என்று சொன்னால் அது மிகையாகாது.