சில நடிகர்கள் பல நாட்களாக திரையுலகில் இருந்தாலும் மிகவும் தாமதமாகவே அவர்கள் மக்களின் கவனத்திற்கு வருவார்கள். அந்த வகையில் தற்போது ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளவர் தான் நடிகர் கராத்தே கார்த்தி. இவரை பலருக்கும் யார் என்று தெரியாது. ஆனால் டாக்டர் படம் பார்த்தவர்கள் ஓரளவிற்கு கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது.

ஆம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் தான் கராத்தே கார்த்தி. இப்படத்தில் வில்லனாக வரும் நடிகர் வினய்யின் இடது கையாக கராத்தே கார்த்தி நடித்திருப்பார். ஆனால் இவர் இதற்கு முன்பு பல படங்களில் நடித்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அதிலும் இவர் அரசாங்க வேலையை உதறிவிட்டு நடிக்க வந்துள்ளார். இதனால் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்துள்ளார் என சமீபத்தில் அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றிய நான் சினிமா மீது இருந்த ஆசையால் வேலையை ராஜினாமா செய்து விட்டேன். அரசாங்க வேலையை யாராவது விட்டுவிட்டு சினிமாவுக்கு போவார்களா? என உறவினர்கள் திட்டினார்கள்.

கேமரா எங்கே இருக்கிறது என்று தெரியாமலே துணை நடிகராக, கூட்டத்தில் ஒருவனாக நடித்திருக்கிறேன். தீரன் அதிகாரம் ஒன்று படம் ஓரளவு என்னை அடையாளம் காட்டியது. பின் கைதி படத்தில் நடித்தபோது தான் இயக்குனர் நெல்சன் எனக்கு டாக்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன், யோகி பாபு, வினய் ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். என் கதாபாத்திரம் பேசப்படுவதில் மிகுந்த சந்தோசம்” என கராத்தே கார்த்தி கூறியுள்ளார்.

மேலும், “டாக்டர் படத்தில் கோவாவில் வரும் காட்சிகளில் வட இந்தியர் போல் நடித்திருப்பேன். அதனால் என்னை நிறைய பேர் வட இந்தியர் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் பச்சைத் தமிழன். டாக்டர் படம் மூலம் நான் பிரபலமாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வருகிறது” என கூறியுள்ளார்.