பொண்டாட்டி, பொண்ணுக்கு மட்டும்தானா.. சிவாஜியை வம்புக்கு இழுத்து எம்ஜிஆர் செய்த ரகளை

50, 60 காலகட்ட தமிழ் சினிமாவை எம்ஜிஆர், சிவாஜி என்ற இருபெரும் ஜாம்பவான்கள் தான் ஆட்சி செய்தனர். அவர்களுக்கென்று ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. சினிமா துறையை பொறுத்தவரை இவர்கள் இருவரும் இரு துருவங்களாக இருந்தாலும் நிஜ வாழ்வில் ஒரு நல்ல நட்புடனும், அன்புடனும் இருந்துள்ளார்கள்.

இதற்கு எடுத்துக் காட்டாக ஒரு சம்பவத்தை சொல்லலாம். சிவாஜிக்கு தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் சூரக்கோட்டை தான் பூர்வீக ஊர். அதனால் அவருக்கு தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் ஏராளமான சொத்துக்கள் இருக்கிறது. அந்த வகையில் அவர் தஞ்சாவூரில் தனக்கு இருந்த ஒரு நிலத்தில் கமலா மற்றும் சாந்தி என இரு தியேட்டர்களை கட்டினார்.

சில காலங்களுக்கு முன்பு வரை தஞ்சாவூரில் நவீன வசதிகளை கொண்டு பிரபலமாக இருந்த தியேட்டர் அது. அப்போது அந்த தியேட்டர்களை கட்டிக் கொண்டிருக்கும் சமயத்தில் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் அதற்கான அனுமதி கொடுக்கவில்லை.

அதன் பிறகு முறையான அனுமதி பெற்று தஞ்சாவூரில் அந்த தியேட்டர்களை சிவாஜி திறந்தார். அதன் திறப்பு விழாவை சிவாஜி மிகவும் பிரம்மாண்டமாக நடிகர், நடிகைகளை அழைத்து நடத்தினார். அந்த விழாவுக்கு எம்ஜிஆர் தான் தலைமை தாங்கினார்.

அந்த விழாவின் போது மேடையில் பேசிய எம்ஜிஆர் தம்பி கணேசா என்ன பொண்டாட்டி, பொண்ணு பெயரில் மட்டும் தியேட்டர் கட்டியிருக்கிறார். உனக்கு கும்பகோணத்திலும் நிறைய இடம் இருக்கிறது அல்லவா அங்கே உன் பெயரிலும் ஒன்றை கட்டிக் கொள் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

அதற்கு சிவாஜி மேடையில் வேண்டாம் என்று சைகை செய்தாராம். இதைப் பார்த்த பலரும் ரசித்து சிரித்தார்களாம். அதுமட்டுமல்லாமல் எம்ஜிஆர் அங்கு வருகை புரிந்திருந்த நடிகர், நடிகைகளை என் தம்பியின் வீட்டு விசேஷத்திற்கு வந்திருக்கிறீர்கள். அதனால் எல்லோரும் சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று அன்பான கட்டளையும் போட்டிருக்கிறார். இந்த நிகழ்வு எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவருக்கும் இடையே இருந்த உன்னதமான நட்பையும், பாசத்தையும் நமக்கு தெளிவாக காட்டுகிறது.