பீஸ்ட் பட அரபிக்குத்து, இந்தப் பாடலின் அட்ட காப்பியா.? வசமாக சிக்கிக்கொண்ட அனிருத்

திரைத்துறையைச் சேர்ந்த இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் சில நேரங்களில் தங்களது படைப்பு புத்தம் புதியப் படைப்பு நான் ரூம் போட்டு யோசித்தது என்று கூவி கூவி விற்றாலும், நெட்டிசன்கள் தேடி பிடித்து அந்த படைப்பு உண்மையில் எங்கிருந்து திருடப்பட்டது என்பதை கண்டுபிடித்து விடுகின்றனர். அப்படி இருக்கையில் அட்லி போன்ற பல இயக்குனர்கள் , குறிப்பாக சில இசையமைப்பாளர்கள் தங்களது படைப்புகளை எங்காவது அட்ட காப்பி அடித்து சிக்கியும் விடுகின்றனர்.

அந்த வரிசையில் இன்று டாப் இசையமைப்பாளராக உள்ள அனிருத் பலமுறை இந்த காப்பி கட் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இவர் சமீபத்தில் இசையமைத்து வெளியான ரஜினியின் தர்பார் படத்தில் “நான் தான்டா இனிமேலு என்ற பாடல், அதற்கு முன்னர் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தண்ணி குடம் எடுத்து என்ற பாடலின் காப்பி என்பது பின்புதான் தெரிய வந்தது.

அதேபோல இவர் இசையில் வெளியான டாக்டர் படத்தின் சோ பேபி என்ற பாடல் உட்பட, விஜய்யின் கத்தி பட தீம் இசை ஒரு ஆங்கில பாடலின் இசை என்றும், அஜித்தின் வேதாளம் படத்தின் தீம் இசை பிரபலமான ஆங்கில பாடலின் இசை என்றும், ஏன் சில நாட்களுக்கு முன்பாக வெளியான சிவகார்த்திகேயனின் டான் பட இசை கூட இந்த காப்பி கட் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

இதையெல்லாம் விட இந்த காப்பி கட் விவகாரத்தில் சிக்கி அனிருத்தின் ஒரு பாடலை யூ-டியூப் தளத்தில் இருந்தே நீக்கிய சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. கோலமாவு கோகிலா படத்துக்காக அனிருத் இசையமைத்த ‘எனக்கு கல்யாண வயசுதான்’ பாடல் காப்பி அடிக்கப்பட்ட பாடல் என சிக்கி யூட்யூப் வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டது, இது இசையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்படி அனிருத் இசை அமைக்க கீ போர்டில் கை வைக்கும் முன்பே நெட்டிசன்கள் உஷாராகி விடுகின்றனர். தற்போது அனிருத் இசையமைக்க நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தின் அரபிக்ககுத்து பாடல் புரோமோ நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயனின் கலகலப்பான உரையாடலோடு பில்டப்பாக வெளியானது.

அதில் வெளியான அரபிக்குத்து பாடல் காப்பி கட் வித்தையில் உருவானது தான் என்று இணையத்தில் ரோஸ்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். அந்தப்பாடலில் முதலில் வரும் இசை சூரியன் படத்தில் கவுண்டமணி தீ மிதிக்கச் செல்லும் போது தேவா போட்ட இசை போல இருப்பதாகவும், அதன் பின் தனுஷின் மாரி படத்தில் வந்த செம்ம ஹிட் ஆன ரவுடி பேபி பாடலின் ஆரம்ப இசையை ஒத்து இருப்பதாகவும் இணையத்தில் நெட்டிசன்கள் அனிருத்தை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

மேலும், இந்த பாடல் 10 மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தி ஸ்டைலில் ரீமிக்ஸ் பாடலாக இணையத்தில் வெளியாகி வைரலான தீவான ஹூன் என்ற பாடலை அட்டக்காப்பி அடித்துதான் இந்த பாடல் உருவாகி உள்ளதாக நெட்டிசன்கள் தற்போது கண்டுபிடித்து விட்டனர். அட்லியிடம் காப்பி கட் குறித்து கேட்கும் போது “ஏழு ராகம் தான் ஏழு தாளம் தான் ” என்று உருட்டுவார். அதுபோல இப்போது வசமாக சிக்கிக்கொண்ட அனிருத் என்ன சொல்லி உருட்டப் போகிறார் என்று தெரியவில்லை.