பீஸ்ட் டிரைலர் விமர்சனம்.. கலக்கலா? சொதப்பலா?

இது தமிழ் சினிமா சும்மா தெறிக்க விடுற நேரம் போல. விக்ரம், பீஸ்ட் ன்னு மாஸ் மசாலா என்டேர்டைன்மெண்ட் படங்கள் வரிசை கட்டி வருகின்றன. கொஞ்சம் முன்னர் தான் வலிமை திரைப்படம் திரையரங்கு வந்து பெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக அதில் இடம்பெற்ற பைக் சண்டைக்காட்சிகள் தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே புதிது.

நேற்றும் கூட விக்ரம் திரைப்படத்தின் ரத்தம் தெறிக்கும் போஸ்டர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்போது நம்ம தளபதியின் டைம். ஆமாம்! பீஸ்ட் படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகி பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கிறது. அதன் சிறப்புக்களை இப்போது பார்க்கலாம். பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

கோகோ, டாக்டர் புகழ் நெல்சன் இயக்குகிறார். படத்தில் நாயகன் யாரென்று நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை, சாட்சாத் நம்ம தளபதி விஜய் தான். ஜோடியாக தெலுங்கு சினிமாவை ஆட்டிப்படைக்கும் பூஜா ஹெக்டே. ஏற்கனவே அனிருத் இசையில் இரண்டு பாடல்கள் வேற லெவலில் ட்ரெண்டிங் ஆனது உலகமறியும்.

இந்த ட்ரைலர் ஓப்பனிங்கில் ஒரு போன் கால் வருகிறது, அதில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மால்-ஐ சில தீவிரவாதிகள் கடத்தியிருக்கிறார்கள். இந்த தகவல் போலீசுக்கு/உளவுத்துறைக்கு செல்கிறது. இந்த காட்சியில் கிறிஸ்துமஸ் மரம், அலங்கார பொருட்கள் வைத்து பார்க்கும்போது அது நவம்பர், டிசம்பர் காலகட்டம் என்று யூகிக்க முடிகிறது. தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும் அரசுக்கும் இடையில் பஞ்சாயத்து செய்யும் ஒரு நெகோஷியேட்டர் ரோலில் இயக்குனர் செல்வராகவன் வருகிறார். அனேகமாக அவர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரம் ஏற்றிருக்க வேண்டும்.

இந்த காட்சிக்கு அடுத்த காட்சியில் தான் நம்ம தளபதியின் அறிமுகம். காவி நிற திரை ஒன்றை கத்தியால் கிழித்தபடி தளபதியின் கண்கள் மட்டுமே முதலில் காட்டப்படுகிறது. இதனை இல்லுமினாட்டி குழுவின் கண்கள் போல நாம் ஒப்பிட முடியாது. ஆனால் இது வேற லெவலில் இருக்கிறது. பின்னணியில் தளபதி அவர்களின் திறமையை செல்வராகவன் குறிப்பிடுகிறார். அதிலும் நம்ம தளபதியை ‘திறமையான ஸ்பை’ என்று குறிப்பிடுகிறார்.

அடுத்த கட்’டில், தளபதி துப்பாக்கி, கத்தி, வெடிகுண்டு என்று அணைத்து ஆயுதங்களையும் கையாளும் மின்னல்வேக காட்சிகள் வந்து போகின்றன. இவை நம்ம தளபதி இந்த ஆயுதங்களை கையாளும் திறமை மிக்கவர் என்று காட்டுகிறது. அடுத்த பிரேமில் ஒரு தீவிரவாத தளம் காட்டப்படுகிறது. கிட்டத்தட்ட விஸ்வரூபம் படத்தில் வருவது போல தீவிர வாதிகளின் பயிற்சி முகாம் போல. அங்கு குண்டுமழை, மேலே சீறிப்பாயும் ஏர்போர்ஸ் விமானங்கள். அப்போது தான் படத்தில் தளபதியின் பெயரை கூறுகிறார்கள். அது ‘வீர ராகவன்’. இங்கும் ஒரு கமல் கனெக்ட் இருக்கு. வேட்டையாடு விளையாடு படத்தில் திறமை மிக்க போலீசான கமலின் கதாபாத்திர பெயர் ராகவன்.

அடுத்தடுத்த காட்சிகளில் நம்ம விஜய் அவர்கள் தீவிரவாதிகளை துவம்சம் செய்யும் பிளாஷ் காட்சிகள் வந்து போகின்றன. ரத்தம் படிந்த வெள்ளை சட்டையுடன் தளபதியை பார்க்கவே ஆக்ரோஷமாக இருக்கிறார். நிஜமாவே பீஸ்ட் போல. பிணைக்கைதியாக தளபதியுடன் யோகி பாபுவும் இருக்கிறார். பூஜா ஹெக்டேவும் இருக்கிறார்.

அடுத்தடுத்த காட்சிகளில் வேகமெடுக்கும் புல்லட்களை அசால்டாக எதிர்கொள்ளும் நம்ம தளபதி, தனது தோட்டாக்களை தீவிரவாதிகளை கொல்வதற்காக மட்டுமே வீணடிக்கிறார். இதில் அமைச்சரின் தலையீடு வேற. அதற்கெல்லாம் அஞ்சாமல் ‘நான் வேற மாதிரி டா’ என்னும் ஸ்டையிலில் பட்டையை கிளப்புகிறார். தளபதி அப்படியே ஒரு மினி கூப்பர் காரில் காட்சி அளிக்கிறார். அந்த நேரம் ஒரு வசனம் சொல்கிறார் பாருங்கள், “நான் அரசியல்வாதி இல்ல, நானொரு போர் வீரன்” என்று. அட்டகாசம். தளபதி விஜய் அவர்கள் சொந்தமாக ஒரு மினி கூப்பர் வகை கார் வைத்திருப்பது இங்கு ஒரு கனெக்ட்.

இப்படி பரபரப்பாக ஓடும் ட்ரைலர், பீஸ்ட் என்னும் பெயருடன் முடிகிறது. அடுத்த அந்த ஒரு நொடி பிரேமில் தளபதி போர் விமானம் ஒன்றை இயக்கிக்கொண்டு இருக்கிறார், அதோடு ‘லான்ச்’ என்று கட்டளையும் இடுகிறார். இதன் மூலம் அவர் விமானப்படையில் மிகப்பெரும் பதவியில் இருப்பதும் புரிகிறது. அனிருத்தின் பின்னணி இசை வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது. நெல்சன் சிறப்பாங்க திரைக்கதை அமைப்பதில் கைதேர்ந்தவர் என்று நிரூபித்திருக்கிறார். எனவே இங்கும் அதை சிறப்பாக செய்திருப்பார் என்று நம்பலாம்.

எப்போது படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை இப்போதே இந்த ட்ரைலர் உருவாக்கிவிட்டது என்பதே உண்மை காத்திருப்போம். ட்ரைலர் வெளியான பத்தே நிமிடங்களில் 2 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. இது மாபெரும் சாதனை. இன்னும் என்னென்ன சாதனைகள் தகர்க்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஏப்ரல் 13 அன்று படம் வெளியாக இருப்பதை ட்ரைலர் உறுதி படுத்துகிறது.

ஆகமொத்தம் இந்த பீஸ்ட் தமிழ் புத்தாண்டை தீபாவளியாக மாற்றப்போகிறது.