பிரண்ட்ஷிப் படம் எப்படி உள்ளது தெரியுமா? இணையத்தில் வெளியான ட்விட்டர் விமர்சனம்

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி உள்ள படமே பிரண்ட்ஷிப். ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியா நடித்துள்ளார். இவருக்கும் இதுவே முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை சென்டோ ஸ்டுடியோஸ் & சினிமாஸ் தயாரித்துள்ளனர். படத்திற்கு உதயகுமார் இசையமைத்துள்ளார். ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா தவிர அர்ஜுன், சதீஷ், கலக்கப்போவது யாரு பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபகாலமாக நிகழ்ந்து வரும் பெண்கள் கற்பழிப்பை கதையில் சேர்த்து ஒரு த்ரில்லர் படமாக கொடுக்க முயற்சி செய்துள்ளார்கள்.

கிரிக்கெட் வீரராக இருந்து ஹீரோ அவதாரம் எடுத்துள்ள ஹர்பஜன் சிங்கிற்கு இது முதல் படம் என்பதால், அவருக்கு சரியாக நடிப்பு வரவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இருப்பினும் நடிக்க முயற்சி செய்துள்ளார். அதேபோல் நடிகை லாஸ்லியாவும் குறும்புத்தனம் என்ற பெயரில் நடிகை ஜெனிலியா போல் நடிக்க முயற்சி செய்துள்ளார்.

சிறப்புத் தோற்றத்தில் நடிகர் அர்ஜுன் படத்தின் ஓப்பனிங்கில் அதிரடி சண்டை காட்சி மூலம் என்ட்ரி கொடுக்கிறார். பின்னர் கிளைமாக்ஸ் காட்சியில் வந்து அதிரடியான கேள்விகளை எழுப்புகிறார். சதீஷ் வழக்கம்போல காமெடி என்ற பெயரில் ஏதே பேசுகிறார். பாலா அவ்வபோது வந்து செல்கிறார். மொத்தத்தில் படத்தை சரியாக திட்டமிடாமல் சொதப்பியுள்ளார்கள்.

படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் எதிர்மறையான விமர்சனங்களையே பதிவு செய்து வருகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே படம் நன்றாக உள்ளது என கூறியுள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் படம் பயங்கர சொதப்பல் என்றே கூறி வருகிறார்கள்.