பாக்ஸ் ஆபீஸில் தோல்வி.. ஆனால் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைடான 6 படங்கள்

காலம் கடந்தாலும் சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு எப்பவுமே பிடித்தமானதாக இருக்கும். ஆனால் அந்த திரைப்படங்கள் தியேட்டரில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெற்றிருக்காது. இவ்வாறு ரசிகர்களின் மனதை கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்த திரைப்படங்கள்.

அன்பே சிவம் – சுந்தர் சி இயக்கத்தில் கமல், மாதவன் இணைந்து நடித்த திரைப்படம் அன்பே சிவம். கம்யூனிசம், நாத்திகம், முதலாளித்துவம் போன்றவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் கமல் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது இத்திரைப்படம்.

ஹேராம்– நடிகர் கமல் இயக்கி, நடித்த திரைப்படம் ஹேராம். இந்தப்படமும் வசூலில் தோல்வி பெற்றது. ஆனால் சில மாதங்களுக்குப் பின்னர் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது. அதில் கமலின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.இன்றும் இது ரசிகர்களின் பேவரைட் படமாக உள்ளது.

இருவர்– மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால், ஐஸ்வர்யாராய், மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த படம் இருவர். தமிழக அரசியலில் முக்கிய புள்ளியாக இருக்கும் தலைவர்களின் கதாபாத்திரத்தை பற்றி எடுக்கப்பட்ட திரைப்படம். நல்ல கதை என்று ரசிகர்களால் பாராட்டை பெற்றாலும் படம் தோல்வி அடைந்தது.

சென்னையில் ஒரு நாள்– ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். உடல் உறுப்பு தானத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இது இருந்தது. இப் படத்தில் சரத்குமார், சேரன், ராதிகா போன்ற பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பரபரப்பான திரைக்கதை மற்றும் கதைக்களம் என இருந்த போதிலும் இந்த படம் தோல்வியை சந்தித்தது.

அருவம் – நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான திரில்லர் திரைப்படம் அருவம். உணவுப் பொருள் கலப்படம் பற்றிய கதை களத்தை கொண்டது இந்த படம். பலரின் பாராட்டைப் பெற்ற இத்திரைப்படம் வசூலில் வெற்றி பெறவில்லை என்பது ஆச்சரியமான உண்மை.

எனக்குள் ஒருவன்– லூசியா என்ற கன்னட திரைப்படத்தின் ரீமேக்தான் எனக்குள் ஒருவன். ஒரே நபரின் கதையை இரண்டு பரிமாணங்கள் உடன் காட்டப்பட்ட வித்தியாசமான முயற்சி இது. ஒன்று கருப்பு வெள்ளையில் மற்றொன்று கலரிலும் காட்டப்பட்ட இப்படம் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் ரசிகர்களால் கவரப்பட்டது.