தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இவரது முதல் படமே மாறுபட்ட கதைக்களத்தில் அமைந்திருந்ததால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து நெல்சனின் இரண்டாவது படமாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் டாக்டர் படம்.

இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவாகியுள்ள செல்லம்மா செல்லம்மா பாடல் ஏற்கனவே யூடியூப்பில் வெளியாகி 125 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது.

படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் பட வெளியீட்டை தள்ளி வைத்தனர். பின்னர் மே மாதம் ரம்ஜான் பண்டிகையையொட்டி வெளியாகும் என தெரிவித்தனர்.

ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக அப்போதும் படத்தின் வெளியீடு தள்ளி சென்றது. இதற்கிடையில் ஓடிடியில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்த டாக்டர் படம் தற்போது வரும் அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

தற்போது டாக்டர் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தளபதி விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வருவதால், விஜய் ரசிகர்களும் டாக்டர் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் பல பிரச்சனைகளுக்கு பின்னர் டாக்டர் படம் வெளியாக உள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.