நடிகர்கள் செய்வது அயோக்கியத்தனம்.. கொந்தளித்த பிரபல சர்ச்சை இயக்குனர்

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் என பல பரிமாணங்களில் வலம் வருபவர் தான் வேலு பிரபாகரன். இவர் பெரும்பாலும் சர்ச்சை நாயகனாகவே அறியப்படுகிறார். காரணம் இவரது படங்களில் மட்டுமல்லாமல் பொது நிகழ்ச்சிகளிலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை மட்டுமே பேசி வருவார். அந்த வகையில் தற்போது ஒரு சர்ச்சை கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

தற்போது நடிகர் வேலு பிரபாகரன், சி.வி.குமார் தயாரித்திருக்கும் ஜாங்கோ என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய வேலு பிரபாகரன், “தெரிந்தோ தெரியாமலோ இந்த நாட்டு மக்களின் மூளையாக இருக்கக்கூடிய சினிமாவுக்குள் நாம் நுழைந்துவிட்டோம். நிறைய சினிமாக்காரர்கள் சினிமாவை மட்டுமே பின்தொடர்கிறார்கள். ஆனால், சி.வி.குமார் மட்டுமே சினிமாவோடு சேர்த்து சமூகத்தையும் பின்தொடர்கிறார்.

உலகிலேயே அதிகமாக சினிமாக்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் நாம். ஆனால், உலகத் தரத்தில் நாம் எங்கிருக்கிறோம் என்று தெரியவில்லை.
ஹிந்தி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை விட அதிக சம்பளம் பெறும் நடிகர்கள், இயக்குனர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். இங்கு நான் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்தியா ஏழைகளின் நாடு. இப்படிப்பட்ட ஏழைகளின் நாட்டில் ஒரு நடிகர் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

100 நாட்கள் நடித்துவிட்டு 100 கோடி ரூபாய் வாங்குது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நம் நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளும் அப்படித்தான். அதனால் தான் நடிகர்களுக்கும் அந்த ஆசை வருகிறது” என சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.

வேலு பிரபாகரனின் இந்த பேச்சு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர்களை அயோக்கியர்கள் என வேலு பிரபாகரன் கூறியுள்ளது நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் திரைத்துறையில் இருக்கும் ஒரு நபரே நடிகர்கள் குறித்து இவ்வாறு பேசியிருப்பது எந்தளவிற்கு சரியானது என தெரியவில்லை.