நச்சினு சரியான கதையை தேர்வு செய்த சரத்குமார்.. பக்கா கெட்டப்பில் தொடங்கிய பூஜை

நடிகர் சரத்குமார் 80 மற்றும் 90களில் கலக்கி வந்தாலும் சினிமாவிற்கே சிறிது காலம் முழுக்கு போட்டு இருந்தார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சரத்குமார் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அவருக்கு ஜோடியாக அந்த சமயத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த சுஹாசினி மணிரத்னம் நடிக்க உள்ளார்.

சமரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் திருமலை பாலுச்சாமி இயக்க உள்ளார். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாக உள்ள இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னை ஏவிஎம் கார்டனில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சரத்குமார், சுஹாசினி திருமலை பாலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படம் குறித்து இயக்குனர் திருமலை பேசியதாவது, “தண்ணீர் தட்டுப்பாடு மிகுந்த வறண்ட பகுதிகளை மையப்படுத்தி இப்படம் உருவாக உள்ளது. நான் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவன். இதுபோன்ற கடுமையான சூழ்நிலைகளை நான் சந்தித்துள்ளேன். கோலிவுட் சினிமாவில் காட்டப்படாத பல கஷ்டமான சூழ்நிலைகளை நாங்கள் சந்தித்துள்ளோம். எனவே இதுவரை நீங்கள் பார்க்காத விஷயங்களை இப்படத்தில் நான் காட்ட போகிறேன்.

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் நபராக சரத்குமாரும், அவருக்கு மனைவியாக சுஹாசினியும் நடிக்க உள்ளனர். மேலும் இவர்களுடன் தொறட்டி பட புகழ் நந்தா, சிங்கம் புலி மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். 90களில் தொடங்கி தற்போதைய காலகட்டத்தில் நடப்பது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ராமநாதபுரம் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது” என கூறியுள்ளார். இதுவரை தண்ணீர் தட்டுப்பாட்டை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் ஏராளமான படங்கள் வந்து விட்டன. தற்போது இயக்குனர் திருமலையும் அதே கதையை கையில் எடுத்துள்ளதால், படம் எந்தளவிற்கு ஓடும் என்பது தெரியவில்லை. பொறுத்தருந்து பார்க்கலாம்.