துப்பாக்கி சூடு சம்பவத்தை பற்றி பேசிய விஜய்.. இப்படி செய்திருந்தால் அந்த உயிர் போயிருக்காது

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வருவதையொட்டி சன் டிவியில் விஜய்யின் நேர்காணல் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் இயக்குனர் நெல்சன் விஜய்யிடம் பல சுவாரசியமான கேள்விகளை கேட்டார்.

அதற்கு பதிலளித்த விஜய் சமூகம் சார்ந்த சில விஷயங்களைப் பற்றியும் குறிப்பிட்டு பேசினார். அதாவது நெல்சன் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை பற்றியும், அதைப் பற்றி விஜய்யின் கருத்து என்ன என்பதை பற்றியும் கேட்டார். சமீபகாலமாக விஜய் சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

அதுபற்றி பேசிய விஜய் ஆரம்ப காலத்தில் நான் சினிமா சார்ந்த விஷயங்களை பற்றி மட்டுமே பத்திரிகைகளில் படிப்பேன். இப்போது சமுதாயம் சார்ந்த பல விஷயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்கிறேன். அதில் என் மனதை மிகவும் பாதித்த விஷயம் என்றால் அது புதுக்கோட்டை துப்பாக்கி சூடு சம்பவம் தான் என்று கூறினார்.

சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் இருந்த அரசு துப்பாக்கிச்சூடு பயிற்சித் தளத்தில் ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டது. அதாவது அங்கு போலீசார் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பயிற்சித் தளத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்தது.

இந்த எதிர்பாராத சம்பவத்தை அடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இது ஒட்டுமொத்த தமிழர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இது தொடர்பான பல போராட்டங்களும் நடைபெற்றது.

அதன் பிறகு அந்த பயிற்சி தளத்தை அரசு நிரந்தரமாக மூடியது. இந்த நிகழ்வை குறிப்பிட்டுப் பேசிய விஜய் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு கொடுத்ததும், பயிற்சி தளத்தை மூடியதும் நல்ல விஷயம்தான். ஆனால் இதுபோன்ற பயிற்சி தளங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தான் அமைக்கப்பட வேண்டும்.

மேலும் துப்பாக்கி சுடும் போது அது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை யோசித்து தான் இந்த மாதிரி பயிற்சி தளங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஒருவேளை அந்தப் பயிற்சி தளம் அங்கு அமைக்கப்படாமல் இருந்திருந்தால் ஒரு அப்பாவி சிறுவனின் உயிர் நிச்சயம் போயிருக்காது என்று வருத்தத்துடன் விஜய் கூறினார்.