திருப்பாச்சியை பட்டி டிங்கரிங் செய்த சிறுத்தை சிவா.. பொங்கி எழுந்த பேரரசு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலை தாறுமாறாக குவித்துக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் அண்ணாத்த. அண்ணாத்த படம் வெளியான போது ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தாய்மார்களின் பேராதரவை பெற்று படம் தற்போது வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் முக்கிய கதை கருவாக அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கியுள்ளார். ரஜினி வயதுக்கு கீர்த்தி சுரேஷ் அண்ணா என்று கூப்பிடுவது கொஞ்சம் சகிக்க முடியவில்லை என்றாலும் அந்த பாசத்தை அழுத்தமாக சொல்லி உள்ளதால் குடும்ப ரசிகர்களை இந்தப் படம் பெரிதும் கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இதுவரை நூற்றுக்கணக்கான அண்ணன், தங்கச்சி படங்கள் வந்துவிட்டன. அதில் இன்றைய தலைமுறையினருக்கு மறக்க முடியாத படமாக இருப்பது விஜய்-பேரரசு கூட்டணியில் வெளியான திருப்பாச்சி படம் தான். திருப்பாச்சி படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய திரைப்படம்.

திருப்பாச்சி படத்திற்கும் அண்ணாத்த படத்திற்கு ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருக்கின்றன. திருப்பாச்சி படத்தில் கிராமத்தில் வசிக்கும் தங்கையை திருமணம் செய்து கொடுக்க சென்னைக்கு வருவதும், அங்கே தங்கையின் கணவருக்கும் ரவுடிகளுக்கும் பிரச்சனை வருவது போலவும் அதை பார்த்த விஜய் பொங்கி எழுவது போலவும் அந்த கதை அமைந்து இருக்கும்.

அண்ணாத்த படத்திலும் ஏறக்குறைய அதே கதைதான். இதில் ஒரே ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால் கீர்த்தி சுரேஷ் காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ஓடிப் போவது ஒன்றுதான். இப்படி இருந்த போதிலும் அண்ணாத்த படத்திற்கு ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் அண்ணாத்த படத்திற்கு எதற்கு இவ்வளவு கொடூரமான விமர்சனங்களை கொடுக்கிறீர்கள் என பேரரசு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கொதித்து உள்ளதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

உங்க படத்தை தான் பட்டி டிங்கரிங் செய்து சிவா எடுத்து உள்ளார் எனவும் அது தெரியாமல் இங்கே வந்து உருட்டிட்டு இருக்கீங்க எனவும் அவரை கேலி கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கடந்த சில வருடங்களில் வெளியான படங்களில் அண்ணாத்த திரைப்படம் தான் மோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.