தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 65வது படமான பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. அதற்குள் விஜய்யின் 66வது படம் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

விஜய்யின் 66வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற தகவலை சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார்கள். வம்சி இயக்கும் இப்படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜை வரும் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

படம் உறுதி செய்த நாள் முதல் தற்போது வரை படம் குறித்த ஏதேனும் ஒரு தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. முன்னதாக இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக படத்தின் நாயகி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நாயகிக்கான தேர்வு நடைபெற்று வருகிறதாம். இந்த பட்டியலில் முன்னணி நடிகைகளான கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் பெயர்கள் அடிபட்டு வருகிறது. இவர்களில் யாரை தேர்வு செய்ய போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

ராஷ்மிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவருக்கும் தெலுங்கில் நல்ல மார்க்கெட் நிலவி வருகிறது. அதேபோல் நடிகை ராஷ்மிகா ஏற்கனவே விஜய்யுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என பல இடங்களில் ஓபனாக கூறியுள்ளார். அதேபோல் கீர்த்தி சுரேஷும் ஏற்கனவே விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர்கள் இருவரில் யாராவது ஒருவரை தான் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.