தலைவி படத்திற்கு நிச்சயம் 5 தேசிய விருதுகள் கிடைக்கும்.. அடித்துக் கூறும் பிரபலம்

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் ஏ.எல்.விஜய். இதனை தொடர்ந்து மதராசபட்டிணம், தெய்வத்திருமகள், தலைவா, சைவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தலைவி எனும் படத்தை விஜய் இயக்கியுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் எந்த ஒரு அரசியல் காட்சியும் இடம் பெற்றிருக்காது எனவும் விஜய் கூறியுள்ளார்.

தலைவி படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார். அதேபோல் நடிகர் அரவிந்த்சாமி மற்றும் நடிகை பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன், “இப்படத்தை இயக்க சரியான நபர் இயக்குனர் ஏ.எல்.விஜய் மட்டுமே என நினைத்தேன். ஜெயலலிதாவின் இமேஜுக்கு சிறப்பாக இருக்கும் என்பதால் தலைவி பெயரை தேர்வு செய்தோம்.

மேலும் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா நடித்தால் நன்றாக இருக்கும் என திரைக்கதை எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் தான் கூறினார். தலைவி படத்திற்கு நிச்சயம் 5 தேசிய விருதுகளாவது கிடைக்கும். ஒருவேளை ஐந்துக்கும் குறைவான தேசிய விருதுகள் கிடைத்தால் அது மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கும்” என கூறியுள்ளார்.