தலைவருடன் கெத்து காட்டும் விக்ரம், சிம்பு.. தீபாவளி ரேஸில் இத்தனை படங்களா.!

ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்தாண்டு தீபாவளிக்கு அஜித்தின் வலிமை படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக விக்ரமின் மகான் மற்றும் விஷாலின் எனிமி படங்கள் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். ஆக்ஷன் என்டர்டெயினராக தயாராகியுள்ள இப்படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காஞ்சிபுரம் மற்றும் டார்ஜிலிங் பகுதிகளில் படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

தற்போது படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முன்னதாக மகான் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இன்று முதல் சிங்கிளை வெளியிட்டு விளம்பர பணிகளை தொடங்கி உள்ளனர்.

முன்னதாக அஜித்தின் வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிரடியாக அறிவித்தார். இந்த திடீர் மாற்றம் காரணமாக மகான் படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தற்போது ரஜினியின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு ஆகிய படங்களே தீபாவளி வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்நிலையில் விக்ரமின் மகான் மற்றும் விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படங்கள் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வலிமை ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்ப பலரும் முயன்று வருகின்றனர். இருப்பினும் வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.