தனுஷின் தலையீட்டால் படுதோல்வி அடைந்த படம்.. வெளிப்படையாக கதறிய இயக்குனர்

தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். அதில் தமிழில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் இவரின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் இவரின் நடிப்பில் மாறன் திரைப்படம் வெளியாகி இருந்தது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெருத்த ஆவலை தூண்டி இருந்தது.

ஆனால் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் திரைக்கதையில் பல குளறுபடிகள் இருந்தது. துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்த கார்த்திக் நரேன் இந்த படத்தின் மூலம் அதைத் தவற விட்டார் என்பதே பலரின் கருத்து.

மேலும் தனுஷ் போன்ற பெரிய நடிகரை இந்தப் படத்தில் கார்த்திக் நரேன் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது இருந்தது. இதனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தது. படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்சுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.

அதனால் தயாரிப்பு நிர்வாகம் இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது. மேலும் கார்த்திக் நரேன் தன் மீது இருந்த குற்றச்சாட்டிற்கு தற்போது ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அதாவது இந்தப் படத்தில் தனுஷின் தலையீடு அதிகமாக இருந்ததாம்.

அதனால் கதையின் போக்கும் மாறி மொத்த படமும் தலைகீழாக மாறியதாகவும், இதுவே படத்தின் படுதோல்விக்கு காரணம் என்றும் அவர் தன் சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். ஆனால் பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை அவர் அந்த பதிவை உடனே நீக்கி விட்டார். இருப்பினும் அவர் தனுஷின் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு வைத்தது தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.