தனக்குத்தானே சூனியம் வைத்த கௌதம் கார்த்திக்.. வாயில் விழுந்த வாய்ப்பை விட்ட பரிதாபம்

நவரச நாயகன் கார்த்திக் அப்போது பெண்களின் கனவு நாயகனாக இருந்தாலும் தான் தேர்ந்தெடுத்து நடித்த படங்களினால் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. தற்போது குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கார்த்திக்கின் வாரிசான கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல பாராட்டைப் பெற்றார். பின்பு கௌதம் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது.

முத்துராமலிங்கம், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித், ஹரஹர மஹாதேவகி, தேவராட்டம் போன்ற படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். அவர் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிப்பதற்காக தற்போதும் போராடிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கௌதம் கார்த்திக் நடிக்க இருந்த இரண்டு ஹிட் படங்களை தவிர விட்டுள்ளார். கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் கொம்பன். இப்படத்திற்காக முதலில் கௌதம் கார்த்திக் இடம்தான் படக்குழு அணுகியுள்ளனர்.

ஆனால் கௌதம் கார்த்திக் இப்படத்தின் கதை பிடிக்கவில்லை என மறுத்துவிட்டாராம். அதன்பின் கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்பட்ட கொம்பன் படத்தில் கார்த்தி ஒப்பந்தமாகியிருந்தார். அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் நானும் ரவுடி தான்.

இப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் முதலில் கௌதம் கார்த்திக்கை கேட்டுள்ளனர். ஆனால் இப்படத்தையும் கௌதம் நிராகரித்து விட்டார். விமர்சன ரீதியாக மிகப்பெரிய பாராட்டைப் பெற்ற நானும் ரவுடிதான் படத்தில் கௌதம் கார்த்திக் நடித்திருந்தால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருக்க முடியும்.