1980ஆம் ஆண்டு இப்ராஹீம் அவர்கள் இயக்கி தயாரித்து வெளிவந்த  திரைப்படம் ஒரு தலை ராகம். இயக்குனர் டி ராஜேந்தர் இப்படத்திற்கு முதன்முதலாக கதை எழுதியுள்ளார்.

சங்கர், ரூபா, சந்திரசேகர் போன்ற புதியவர்களை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. கல்லூரியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் கல்லூரி மாணவர்கள் இடையே மிகப்பெரிய தாக்கத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தியது.

படம் வெளியாகி இரண்டு நாட்கள் தியேட்டரில் கூட்டமே இல்லை என்ற நிலையில் தான் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் படம் வசூலில் பட்டையை கிளப்பியது. வெள்ளி விழா கண்ட இத்திரைப்படம் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. ரஜினி கமல் திரைப்படங்களுக்கு ஈடாக வசூலில் சாதனை படைத்தது ஒரு தலை ராகம்.

இப்படத்தின் கதைகள் பாதி முடிவடைந்த பொழுதே இப்படம் நல்ல வெற்றி பெறும் என்று அறிந்த இப்ராஹீம், அப்பொழுதே டி ராஜேந்தரிடம் இருந்து அனைத்து உரிமைகளையும் வாங்கி விட்டார். பிறகு ஒரு மீட்டிங்கில் டி ராஜேந்தர் இதனை பற்றி கூறுவார்.

இத்திரைப்படத்திற்கு பின்னர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் ஒரே சாயலில் இருந்தது. இதை வைத்தே ரசிகர்கள் ஒரு தலை ராகம் டி.ராஜேந்தரின் படைப்பு என்பதை புரிந்து கொண்டனர்.

டி ராஜேந்தர்க்கு  ஒரு தலை ராகம் முதல் படம் என்பதால் தயாரிப்பாளரின் பெயரையே இயக்கத்திற்கு பயன்படுத்தியதாக ஒரு செய்தி வெளிவந்தது. தனக்கென ஒரு பாணியைக் கொண்டு குடும்பங்களை கவரும் சென்டிமென்ட் இயக்குனராக வலம் வந்தார் டி ராஜேந்தர்.

அதன்பிறகு இயக்கம் மட்டுமின்றி கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, வசனம், நடிப்பு போன்ற அனைத்தையும் அவர் ஒருவரே மேற்கொண்டார். இன்றளவும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.