டாக்டர் திரைப்படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டான். இதில் நடிகர் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் மிகவும் அமைதியானதாக இருக்கும். ஆனால் டான் படத்தில் அதற்கு நேர்மாறாக சிவகார்த்திகேயன் தன்னுடைய வழக்கமான குறும்பு, காமெடி கலந்து நடித்து இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

கல்லூரி வாழ்க்கையை ஞாபகப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட இத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி பிரின்ஸ்பால் ஆகவும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சிவாங்கி, பாலசரவணன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. வரும் ஜனவரி 26, 2022 அன்று படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் படத்தின் டப்பிங் வேலைகள் படு வேகமாக நடந்து வருகிறது.

இப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்து உருவாகியிருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் எஸ் ஜே சூர்யாவுக்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து எஸ் ஜே சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தில் நடித்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது என்று பாராட்டி உள்ளார்.