சமீபகாலமாகவே தமிழ் சினிமாவில் பொழுதுபோக்கிற்காக படம் எடுப்பதைவிட சமூக கருத்துக்களையும், பிரச்சனைகளையும் முன்வைத்து எடுக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்னணி நடிகர்களும் அவர்களின் படங்களில் சமூக அநீதிகளை மிகவும் தைரியமாக பேசுகிறார்கள்.

அந்த வகையில் மண்டேலா, கர்ணன், ஜெய் பீம் போன்ற படங்கள் அவர்கள் சொல்ல வந்த செய்திகளை மிகவும் ஆணித்தனமாக கூறியிருந்தார்கள். தற்போது இந்த வரிசையில் என்னங்க சார் உங்க சட்டம் படமும் இணைந்துள்ளது. ஃபேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் என்னங்க சார் உங்க சட்டம்.

பீச்சாங்கை படத்தில் நாயகனாக நடித்த நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் தான் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் ஐரா, பகவதி பெருமாள், ரோகினி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை மையமாக வைத்து தான் என்னங்க சார் உங்க சட்டம் படம் உருவாகி உள்ளது. ஆனால் தமிழக அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாகவே, படக்குழு படத்தை முடித்து, தணிக்கை சான்றிதழையும் பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

படத்தின் முதல் பாதியில் ஜாதி, மதம், காதல், காமெடி என்று கலகலப்பாக செல்கிறது. இரண்டாம் பாதியில் ஜாதி ரீதியாக ஏற்படும் இட ஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கருத்து, கலவரம், சண்டை, பிரச்சனை என நகர்கிறது. இப்படத்தில் மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், படத்தின் முதல் பகுதியில் நடித்துள்ள 12 நடிகர்கள் அனைவரும் படத்தின் இரண்டாம் பகுதியில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.

ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு, இன்றைய காலத்திலும் ஜாதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என அனைத்து விதமான பிரச்சனைகளையும் மிகவும் தெளிவாக படத்தில் காட்டியுள்ளார்கள். இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் அவசியம் படம் என்னங்க சார் உங்க சட்டம். இப்படத்திற்கு ரசிகர்களும் நல்ல விதமாகவே கமெண்ட் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் அத்தியாவசியமான படம்.