ஜெய் பீம் பட கொடூரமான போலிசின் மறுபக்கம்.. இவர் நடிக்கறதுக்கு முன்னாடி யார் தெரியுமா?

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படம் வெளியான சமயத்தில் அந்த படத்தில் கண்ணபிரான் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் நட்ராஜை பலரும் திட்டி தீர்த்தனர். ஒரு நடிகரின் நடிப்பு எந்த அளவிற்கு தத்ரூபமாக இருந்தால் அது நடிப்பு என்பதை தாண்டி மக்கள் அவரை வசைபாடி இருப்பார்கள்.

தற்போது கண்ணபிரானை மறந்து எஸ்.ஐ.குருமூர்த்தியை திட்ட தொடங்கி விட்டார்கள். குருமூர்த்தி வேறு யாருமல்ல நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ஜெய்பீம் படத்தில் எஸ்.ஐ.குருமூர்த்தி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து மிரட்டியுள்ள வில்லன் நடிகர் தமிழ் தான். இவர் நடிகராவதற்கு முன்பே ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.

ஆம் விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற படங்களில் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் தமிழ். அதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபுவை வைத்து டாணாக்காரன் என்ற படத்தை தமிழ் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் இயக்குனர் தமிழ் ஜெய்பீம் படத்தில் ஒரு கொடூர வில்லனாக நடித்து அனைவரையும் மிரட்டி உள்ளார். இவர் மனைவியே இவரை பார்த்து பயப்படும் அளவிற்கு ஜெய்பீம் படத்தில் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ள இயக்குனர் தமிழ் குறித்த மேலும் சில சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆமாங்க தமிழ் தற்போது தான் ஒரு நடிகர், இயக்குனர் ஆனால் ஆரம்பத்தில் இவர் தமிழ்நாடு காவல்துறையில் காவலராக பணிபுரிந்துள்ளாராம். இந்த தகவலை அவரே கூறியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தமிழ், “நான் சென்னையில 10 வருஷம் போலீசா இருந்தேன். எனக்கு சினிமான்னா பெரிய விருப்பம், ஈர்ப்பு. அதனாலதான் போலீஸ் வேலையை உதறிதள்ளிட்டு, எனக்கு புடிச்ச சினிமாவுகுள்ள ரத்தமும் சதையுமா நுழைந்தேன்” என கூறியுள்ளார்.

அதுமட்டும் இல்லைங்க ஜெய்பீம் படம் உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டே எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள தமிழ் நிஜத்திலும் காவலராக இருந்த காரணத்தால் இந்த வழக்கு குறித்த அனைத்து தகவல்களையும் நன்கு அறிந்தே படத்தில் நடித்துள்ளார். மேலும் இதுதான் படத்திற்கு பக்கபலமாகவும் உள்ளது. என்னதான் மக்கள் கரித்து கொட்டினாலும் அதை தன் நடிப்புக்கு கிடைத்த விருதாகவே தமிழ் கருதுகிறார்.