ஜெய் பட டீசரை வெளியிடும் மார்கெட்டிங் நடிகர்.. பிள்ளையாரே நடந்து போறாரு பூசாரிக்கு புல்லட்டு கேட்குதாம்

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஜெய். இதனை தொடர்ந்து சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருப்பினும் சுப்ரமணியபுரம் படத்தில் நாயகனாக நடித்ததன் மூலமே தமிழ் ரசிகர்களின் கவனம் இவரது பக்கம் திரும்பியது. இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜா ராணி, கலகலப்பு2, வலியவன், வடகறி, திருமணம் எனும் நிக்கா, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக ஜெய் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஓரளவிற்கு மினிமம் பட்ஜெட் ஹீரோவாக வலம் வந்த ஜெய்யின் நடிப்பில் சமீப காலமாக வெளியான படங்கள் தோல்வியை சந்தித்தன. தற்போது சரியான பட வாய்ப்புகள் அமையாமல் தடுமாறி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ஜெய் அறிமுக இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் உருவாகியுள்ள எண்ணித் துணிக எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். சுப்பிரமணியம் தயாரிக்கும் இப்படத்தில் சீதக்காதி படம் மூலம் அறிமுகமான வைபவ் அண்ணன் சுனில் ரெட்டி வில்லனாக நடித்துள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் நிச்சயம் ஜெய்க்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இன்று இப்படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். சினிமாவை பொருத்தவரை தங்களது படத்தை விளம்பரம் செய்யும் விதமாக ஒரு முன்னணி நடிகர் மூலம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்குவார்கள்.

அந்த வகையில் எண்ணித் துணிக படக்குழுவினரும் அவர்களது படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயனிடம் வெளியிடுமாறு கேட்டுள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயனும், ஜெய்க்கு உதவி செய்யும் விதமாக இன்று மாலை 7 மணிக்கு இப்படத்தின் டீசரை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வரும் ஜெய்க்கு உதவும் விதமாக சிவகார்த்திகேயன் இப்படத்தின் டீசரை வெளியிட உள்ளாராம்.