தமிழ் சினிமாவில் இன்றைய நாளில் மிகவும் பிஸியான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். அந்த அளவிற்கு இவர் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்த ஒரு மாதத்தில் மட்டுமே இவரது நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகியுள்ளன.

இதில் விஜய் சேதுபதி, ராசி கண்ணா, பார்த்திபன் நடித்திருந்த துக்ளக் தர்பார் படம் நேரடியாக டிவியில் வெளியானது. ஆனால், இந்தப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களே அதிகமாக வந்தது. இதுதவிர லாபம், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் ஓடிடி-யில் வெளியானது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் இவர் வில்லனாக நடித்திருந்த ‘உப்பெண்ணா’ படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து அவருக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

விஜய் சேதுபதி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பாடகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பன்முகத்தன்மையுடன் வலம் வருகிறார். ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவந்த இவர் தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் இன்று முன்னணி நடிகராக உள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது ‘கடைசி விவசாயி’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இவர், இயக்குனர் மிஷ்கினை சந்தித்தது மற்றும் அவருடன் பேசியது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில், ‘சைக்கோ’ படம் பார்த்தேன், மிக அருமையாக இருந்தது.

அதில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர் வடிவமைத்திருந்தவிதம் மிக அருமை. பிசாசு 2 படத்தின் கதையை அவர் என்னிடம் கூறினார். அதில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். எப்படியாவது எனக்காக ஒரு கேரக்டரை பிசாசு 2 வில் உருவாக்குங்கள் என்று கூறியுள்ளேன், என்றார். ஆனால், இதற்கு மிஷ்கின் என்ன கூறினார் என்பது தெரியவில்லை. மிஷ்கின் சம்மதித்தால் பிசாசு 2 வில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதி.