சூர்யா தயாரித்துள்ள ரா ரா திரை விமர்சனம்.. நயன்தாரா படம் பாதி விக்ராந்த் பட மீதி

2 டி நிறுவனத்தின் தயாரிப்பில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி உள்ள படம் “இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்”. அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ளார். குன்னிமுத்துவாக ‘மிதுன் மாணிக்கம்’; வீராயி வேடத்தில் ரம்யா பாண்டியன், பத்திரிகையாளர் ரோலில் வாணி போஜன் என இந்த மூவர் தான் படத்தில் நமக்கு தெரிந்த முகங்கள்.

மாடு திருடு போகிவிட்டது என புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் செல்வதில் ஆரம்பிக்கிறது படம். சிறிய கிராமம், வெகுளியான மக்கள் என காட்சிகள் விரிகிறது. இடையிடையே பிளாஷ் பேக் காட்சிகளில் நம் நாயகன், நாயகியின் சுவாரஸ்ய அறிமுகம், திருமணம், கல்யாண சீராக கொடுக்கப்பட்ட காங்கேயன் குட்டி வெள்ளையன், கருப்பையன் என செல்கிறது திரைக்கதை.

டிவி சேனல் தங்கள் டி ஆர் பி எகிற வைக்க இதனை பிரேக்கிங் நியூஸ் ஆக்குகின்றனர். பின்னர் அரசியல் வாதிகளின் என்ட்ரி, ஊரின் பரிதாப நிலை, மற்றும் பல கருத்துக்களை முன் வைத்துள்ளார் இயக்குனர்.

மாடு தொலைந்ததை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என ஆரம்பிக்கும் படம் பல்வேறு மெசேஜ்களை மக்களுக்கு சொல்கிறது. இறுதியில் மாடும் கிடைத்து விடுகிறது, கிராமத்துக்கும் வாணி போஜன் மற்றும் நல்லவர்கள் வாயிலாக விடிவுகாலம் பிறக்கிறது.

திரைக்கதையை மெருகேற்றி இருக்க வேண்டும். கருத்துக்களை குறைத்து, எமோஷன்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் பட்சத்தில் சூப்பர் ஹிட் படமாக இது அமைந்திருக்கும், கூடவே பல விருதுகளையும் குவித்திருக்கும்.

நயன்தாராவின் அறம் படத்தில் வருவது போன்று இங்கு வாணி போஜன் தனி மனுஷியாக முழு திட்டத்தையும் செயல்படுத்துகிறார். அதே போல விக்ராந்தின் பக்ரீத் படத்தில் வருவது போன்று இதில் காங்கேயன் மாட்டுடன் ட்ராவல் அமைந்துள்ளது.

நம் நாயகன், நாயகி இல்லாத நேரத்தில் உணவையே சாப்பிடாமல் கோபித்துக்கொள்ளும் மாடுகளை எப்படி அவ்வளவு எளிதில் வீட்டில் இருந்து கடத்தி சென்றனர், ஒருவரிடம் கூட செல் போன் இல்லாத கிராமம் கூட இருக்கிறது என தொடங்கி  சில பல இடங்களில் லாஜிக் மீறல் அப்பட்டமாக தெரிகிறது.  எனினும் வீட்டில் அமர்ந்து இப்படத்தை தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.

சினிமாபேட்டை ரேட்டிங் 2 .5 /5

AllEscort