நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் படம் ஒரு படம் என்பதை தாண்டி மக்கள் மனதில் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் பலர் மீள முடியாமல் தவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு உண்மை சம்பவத்தை மிகவும் உணர்வுப்பூர்வமாக இயக்குனர் ஞானவேல் வழங்கியுள்ளார்.

இதுவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் விதமாக தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், ஜெய் பீம் படம் அவற்றில் இருந்து தனித்து பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வர் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலரும் இந்த படத்தை பாராட்டி வருகிறார்கள். ஏன் சிலர் படத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறியும் அழுதுள்ளார்களாம்.

இப்படி இருக்க ஒருவர் மட்டும் ஜெய்பீம் படத்தை விமர்சனம் செய்துள்ளார். அவர் வேறு யாருமல்ல நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான ஹெச். ராஜா தான். ஜெய் பீம் படம் குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், “நம் குழந்தை 3 மொழி படிக்கக்கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்துகொள்வோம்” என விமர்சனம் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் தனக்கும் தனது படத்திற்கும் கிடைத்த இந்த விமர்சனத்தை பார்த்த நடிகர் சூர்யா மிகவும் கூலாக அந்த பதிவுக்கு லைக் போட்டுள்ளார். விமர்சனத்தையும் விரும்பி ஏற்ற நடிகர் சூர்யாவின் இந்த லைக்கும், ஹெச்.ராஜாவின் டிவிட்டர் பதிவும் தான் தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உளள்து.

அனைவராலும் பாராட்டப்படும் படத்திற்கு இதுபோன்ற சில எதிர்மறையான விமர்சனங்கள் எழுவது சாதாரணம் தான். ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மிகவும் கூலாக நடிகர் சூர்யா கையாண்டுள்ள விதம் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸை பெற்றுள்ளது. குறை கூறுபவர்கள் ஆயிரம் கூறினால் படம் வெற்றி என்பது மறுக்க முடியாத உண்மை.