சிவாஜி லவ் பண்ணி வேலை செய்த 5 இயக்குனர்கள்.. ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ் படம்

சினிமாவில் நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று ரசிகர்களால் புகழப்பட்ட சிவாஜி கணேசன் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் பல தலைமுறை இயக்குனர்களுடனும் பணிபுரிந்திருக்கிறார்.

அதில் சில குறிப்பிட்ட இயக்குனர்களை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் படம் நடிக்க கேட்டால் நடிகர் திலகம் தயங்காமல் ஒப்புக் கொள்வார். அப்படி நடிகர் திலகத்தை கவர்ந்த ஐந்து இயக்குனர்களைப் பற்றி இங்கு காண்போம்.

ஏ சி திருலோகச்சந்தர் அந்தக் கால தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனராக கவனிக்கப்பட்டவர் திருலோகச்சந்தர். எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களை வைத்து ஏராளமான திரைப்படங்களை கொடுத்த பெருமை இவருக்கு உண்டு. அந்த வரிசையில் இவர் சிவாஜியை வைத்து இரு மலர்கள், தெய்வ மகன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

அதில் தெய்வமகன் திரைப்படம் இந்தியாவில் இருந்து முதன் முதலாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ் படம் ஆகும். சிவாஜி தந்தை, மகன்கள் என்ற மூன்று கேரக்டர்களில் நடிப்பின் வேறொரு பரிமாணத்தை காட்டியிருப்பார். அந்த வகையில் இந்தப் படம் நடிகர் திலகத்தின் பேர் சொல்லும் ஒரு முக்கிய படமாக இருக்கிறது.

ஏ பீம்சிங் அப்போதைய தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணியாக பார்க்கப்பட்டது சிவாஜி கணேசன் மற்றும் பீம்சிங் ஜோடி. இவர்கள் கூட்டணியில் கிட்டத்தட்ட 14 படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. அவை எல்லாவற்றிலும் ஒரு சிறப்பு இருக்கிறது.

என்னவென்றால் அந்தப் படங்களின் பெயர்கள் அனைத்தும் ப வரிசையில் தான் தொடங்கும்படி இருக்கும். அதன்படி பாகப்பிரிவினை, பாசமலர், படிக்காத மேதை, பாலும் பழமும் திரைப்படங்கள் ரசிகர்களின் பேவரைட் படங்களாகும். இந்த கூட்டணியில் கிட்டத்தட்ட ஆறு படங்களில் காதல் மன்னன் ஜெமினியும் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

கே பாலச்சந்தர் தமிழ் சினிமா வரலாற்றில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பெற்றிருக்கும் கே பாலச்சந்தர் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு.

பலரும் நடிக்க விரும்பும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்த இவரை சிவாஜிக்கு ரொம்பவே பிடிக்கும். இவரின் இயக்கத்தில் சிவாஜி எதிரொலி என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஆனால் இவர்கள் இருவரும் அதிகப் படங்களில் இணைந்து பணியாற்றியது இல்லை.

பிஆர் பந்துலு இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர். பல பிரம்மாண்ட திரைப்படங்களை இவரால் மட்டும் தான் கொடுக்க முடியும் என்ற அளவுக்கு பல படைப்புகளை கொடுத்தவர். சிவாஜியின் நெருங்கிய நண்பரான இவர் அவரை வைத்து ஏராளமான படங்களை தயாரித்து இயக்கியிருக்கிறார்.

அந்த வகையில் இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திரைப்படம்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். இந்தப் படத்திற்குப் பிறகு கட்டபொம்மன் என்றாலே அது சிவாஜிதான் என்று சொல்லும் அளவுக்கு நடிகர் திலகம் தன் நடிப்பால் அனைவரையும் மிரட்டினார். இப்படம் நல்ல லாபத்தை பெற்றதோடு மட்டுமின்றி பல விருதுகளையும் தட்டிச் சென்றது. அதன் பிறகு இந்த வெற்றிக் கூட்டணி பல திரைப்படங்களில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

ஏபி நாகராஜன் சிவாஜிக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் இவருக்கு ஒரு தனி இடம் உண்டு. அந்த வகையில் நடிகர் திலகத்தை வைத்து இவர் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். அதில் பாவை விளக்கு, சம்பூர்ண ராமாயணம், நவராத்திரி போன்ற பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் சிவாஜி நடித்த நவராத்திரி திரைப்படம் மிக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.