சிவாஜி கொடுத்த வாய்ப்பை இழந்த நண்பர்.. கைதவறி போன மெகா ஹிட் படம்

தன்னுடைய அற்புதமான நடிப்பாலும், கம்பீரமான குரலும் சிவாஜி கணேசன் தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து விடுவார். அவர் மறைந்தாலும் அவர் நடித்த அந்த கதாபாத்திரங்கள் இன்றும் அவர் பெயர் சொல்லும்படி இருக்கிறது. அப்படி நம் நினைவில் என்றும் நிலைத்திருக்கக் கூடிய ஒரு கதாபாத்திரம்தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.

இப்போது கட்டபொம்மன் யார் என்று கேட்டால் அது சிவாஜி கணேசன்தான் என்று நாம் சொல்லும் அளவிற்கு அவர் அந்த கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு இந்த கதையை சிவாஜி கணேசன் மேடையில் ஒரு நாடகமாக நடித்துள்ளாராம்.

இதன் பிறகே இந்த நாடகம் திரைப்படமாக உருவானது. இந்தப் படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி, விகே ராமசாமி போன்ற ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து இருப்பார்கள். இதில் ஜெமினி கணேசன் வெள்ளையத் தேவன் என்ற கேரக்டரை ஏற்று நடித்து இருப்பார்.

இந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன். இவர் சிவாஜிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஆவார். சிவாஜிதான் இந்தத் திரைப்படத்தில் வெள்ளையத்தேவன் கேரக்டருக்கு ராஜேந்திரன் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்துள்ளார்.

எஸ் எஸ் ராஜேந்திரனும் இந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் சில காரணங்களால் படப்பிடிப்பு நடத்துவதற்கு தாமதமாகியுள்ளது. அந்த சமயத்தில் எஸ்எஸ் ராஜேந்திரனுக்கும் வேறு சில படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

அதனால் இவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகுதான் படக்குழு ஜெமினி கணேசனை அணுகி இந்த கேரக்டரில் நடிக்க வைத்தார்கள். பிறகு படமும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்படி ஒரு வரலாற்று திரைப்படத்தை எஸ்எஸ் ராஜேந்திரன் தவறவிட்டது தற்போது அனைவருக்கும் புதிய தகவலாக இருக்கிறது.