சாக்லேட் பாய் மாதவனின் பதினோரு வெற்றி படங்கள்.. ஒன்னும் ஒன்னும் வேற ராகம்

கவர்ச்சிகரமான புன்னகையால் சாக்லேட் பாய் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் மாதவன். சின்னத்திரையின் மூலம் நடிப்பு வாழ்க்கையை துவங்கி கோலிவுட் முதல் பாலிவுட் வரை வெற்றிப்படங்களை கண்டுள்ளார். இவர் நடித்த பாலிவுட் படமான ரெஹனா ஹேர் தேரா தில் மெய்ன் திரைப்படத்தில் மேடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு மாதவன் மேடி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

அலைபாயுதே: மணிரத்னம் இயக்கத்தில் 2004 இல் வெளியான திரைப்படம் அலைபாயுதே. இப்படத்தில் மாதவன், ஷாலினி, சொர்ணமால்யா என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் காதல் ஜோடி, கல்யாணத்துக்கு பிறகும் வாழ்க்கை பயணம் பற்றிய கதையாக இருந்தது. இப்படத்திற்குப் பிறகு மாதவன் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்டார். இப்படத்தில் உள்ள ஏ ஆர் ரகுமானின் அனைத்து பாடல்களுமே ஹிட். நீ அழகா இருக்கேன்னு நினைக்கல… நான் உன்ன காதலிக்கலை.. ஆனா, இதெல்லாம் நடந்திடும் ஒனே பயமா இருக்கு.. என்ற மாதவனின் வசனம் இன்றுவரை எல்லோராலும் ரசிக்கப்படும். இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

மின்னலே: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மின்னலே. இப்படத்தில் மாதவன், ரீமாசென், அப்பாஸ், நாகேஷ், விவேக் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இப்படம் இளமை துள்ளல் மிக்க அழகான காதல் படம். மாதவனை இளம் பெண்களின் கனவு நாயகனாக நிலை நிறுத்திய படம் மின்னலே. இப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த அனைத்து பாடல்களுமே ஹிட் ஆனது. கௌதம் மேனன், ஹாரிஸ், தாமரை கூட்டணியில் தவிர்க்கமுடியாத வெற்றிப் படங்களில் இதுவும் ஒன்று. மாதவனுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் மின்னலே.

கன்னத்தில் முத்தமிட்டால்: மணிரத்னம் இயக்கத்தில் 2002ல் வெளியான திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால். இப்படத்தில் மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் அமுதாக பார்த்திபன் மகள் கீர்த்தனா நடித்திருந்தார். இப்படத்தில் மாதவன் திருச்செல்வம் ஆக அமுதாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டானது. இப்படம் ஆறு தேசிய விருதும், நான்கு ஃபிலிம்ஃபேர் விருதும், ஏழு தமிழ்நாடு அரசு விருதும் பெற்றது.

ரன்: லிங்குசாமி இயக்கத்தில் 2002ல் வெளிவந்த திரைப்படம் ரன். இப்படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக், ரகுவரன் என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் மாதவன் துறுதுறு இளைஞனாக சிவா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். ரன் படம் 200 நாட்கள் வரை ஓடி மெகாஹிட் சாதனையை படைத்தது.

ஆயுத எழுத்து: மணிரத்னம் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயுத எழுத்து. இப்படத்தில் மாதவன், சூர்யா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், திரிஷா, ஈஷா தியோல் என பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் மாதவன், கூலிக்கு கொலை, கொள்ளை போன்ற தீய செயலில் ஈடுபடும் இன்பசேகர் ஆக நடித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு மனைவியாக மீரா ஜாஸ்மின் சசி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

தம்பி: சீமான் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தம்பி. இப்படத்தில் மாதவன், பூஜா, வடிவேலு, மணிவண்ணன், மனோபாலா ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் மாதவன் அதிரடி நாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் மலையாள நடிகர் பிஜு மேனன் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இரண்டு: சுந்தர் சி இயக்கத்தில் 2006 இல் வெளியான திரைப்படம் இரண்டு. இப்படத்தில் மாதவன், ரீமாசென், அனுஷ்கா, வடிவேலு என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தை குஷ்பூ தயாரித்து இருந்தார். இப்படம் நகைச்சுவை கலந்த அதிரடித் திரைப்படம் ஆக இருந்தது. இப்படத்தில் மாதவன் இரட்டை வேடத்தில் சக்தி மற்றும் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். டி இமான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

வேட்டை: லிங்குசாமி இயக்கத்தில் 2012ல் வெளிவந்த திரைப்படம் வேட்டை. இப்படத்தில் மாதவன், ஆர்யா, சமீராரெட்டி அமலாபால் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் மாதவன் போலீஸ் ஆபீஸர் திருமூர்த்தி ஆக நடித்து இருந்தார். அவர் தம்பியாக ஆர்யா குருமூர்த்தி ஆக நடித்திருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததோடு வணிகரீதியாக வசூல் சாதனை படைத்தது.

இறுதிச்சுற்று: சுதா கொங்கரா இயக்கத்தில் குத்துச்சண்டை மையமாகக் கொண்ட 2016 இல் வெளிவந்த திரைப்படம் இறுதிச்சுற்று. இப்படத்தில் மாதவன், ரித்திகா சிங் நடித்திருந்தார்கள். இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக பிரபு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகுந்த பாராட்டையும், வெற்றியையும் அடைந்தது.

விக்ரம் வேதா: காயத்ரி மற்றும் புஷ்கர் இயக்கத்தின் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விக்ரம் வேதா. இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், சிரத்தா சிறீநாத் என பலரும் நடித்து இருந்தார்கள். இப்படத்தில் விக்ரம் ஆக மாதவனும் வேதா கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் நடித்திருந்தார்கள். இப்படம் 3 விகடன் விருதுகள் பெற்றது. இப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

மாறா: திலீப் குமார் இயக்கத்தில் 2021ல் வெளியான திரைப்படம் மாறா. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் மாதவன், சிரத்தா சிறீநாத், அபிராமி என பலரும் நடித்திருந்தார்கள். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த சார்லி படத்தின் ரீமேக்தான் மாறா. இப்படத்தில் மாதவன் சிறந்த ஓவியர் கலாரசிகர் ஆக மாறா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.