காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள நடிகர் சந்தானம் நடிப்பில் சபாபதி என்ற படம் வெளியாகியுள்ளது. இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படம் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள சபாபதி படமாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை பார்ப்போம்.

இயக்குனர் ஆர். சீனிவாச ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள சபாபதி படத்தில் சந்தானம் தவிர , குக் வித் கோமாளி பிரபலம் புகழ், எம்.எஸ்.பாஸ்கர், வம்சி கிருஷ்ணா, உமா பத்மநாபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நேரடியாக திரையரங்குகளில் இன்று வெளியாகி ஓடி கொண்டிருக்கிறது.

முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகியுள்ள சபாபதி படத்தில் கதைப்படி திக்குவாய் பிரச்சனை உள்ள சந்தானம் வேலை தேடி அலையும் இளைஞராக வருகிறார். அவருக்கு வேலை கிடைத்ததா? திக்குவாய் காரணமாக அவரது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை நகைச்சுவை கலந்து இயக்குனர் வெளிப்படுத்தியுள்ளார்.

சந்தானம் குறித்து சொல்லவே வேண்டாம் காமெடியில் இவரை அடித்து கொள்ள ஆளே கிடையாது. அந்த வகையில் சபாபதி படத்தில் சந்தானம் டைமிங் காமெடியில் கலக்கியுள்ளார். நாயகியுடனான கெமிஸ்ட்ரி பாடல்கள் நடனம் என அனைத்துமே ஓரளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

என்னவொன்று முன்னதாக டிக்கிலோனா படத்தில் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் விதமாக காமெடி காட்சி இடம் பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல சபாபதி படத்தில் தண்ணீர் கோரி ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகளை இழிவுப்படுத்தும் விதமாக போஸ்டர் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பே கிடைத்து வருகிறது.

டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் யூடியூப் போன்ற சேனல்களிலும் ரசிகர்கள் சபாபதி படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்களையே தெரிவித்து வருகிறார்கள். குடும்பத்துடன் சென்று சிரித்து மகிழ சிறந்த படமாக சபாபதி உள்ளது என பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இது ஒருபுறம் இருந்தாலும் இதுவரை வந்த சந்தானம் படத்திலேயே இந்த படம் படு மொக்கை என்பது போன்ற கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.